ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடருக்காக பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி தனது 2-வது முதல்தர கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் வெற்றி வாகை சூடியது.
அடிலெய்டில் பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் ஆடப்பட்ட போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 207 ரன்களையும் எடுக்க, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 233/9 என்று டிக்ளேர் செய்ய, 2-வது இன்னிங்ஸில் வெற்றி பெற 268 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 75 ரன்களுக்குச் சுருண்டது, கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைந்தாலும் பேட்டிங் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர், குறிப்பாக அலிஸ்டர் குக் முதல் இன்னிங்சில் 15 ரன்களையும் 2வது இன்னிங்சில் 32 ரன்களையும் எடுத்தது இங்கிலாந்தின் கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. கிரெய்க் ஓவர்டன் அதிக வேகம் வீசாவிட்டாலும் இவரது உயரத்தினால் பந்தை நன்றாக எழும்பச் செய்கிறார், இரு புறமும் ஸ்விங் செய்கிறார், இது இங்கிலாந்துக்கு பெரிய அனுகூலமாக அமைந்துள்ளது.
காரணம் இந்த கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி இருப்பதிலேயே பலவீனமான அணி என்று கருதப்படும் அணியாகும்.
பேட்டிங் முற்றிலும் திருப்தியளிக்காத வகையில் உள்ளது, கிரிக்கெட் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ரயான் ஹாரிஸ் போட்டி முடிந்தவுடன் கூறும்போது, “இங்கிலாந்து பேட்டிங் பலவீனமானது, குறிப்பாக 6 அல்லது 7-ம் நிலையில் பென் ஸ்டோக்ஸ் இல்லை” என்றார்.
அலிஸ்டர் குக்கை இந்தப் போட்டிகளை வைத்து முடிவு கட்ட முடியாது, ஒரு ஆஷஸ் தொடரில் பெரிய அளவில் எழுச்சி கண்டு 766 ரன்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கிலாந்து பேட்டிங் வரிசை குக், ரூட் நீங்கலாக அனுபவமின்மையில் உழன்று வருகிறது. ஆஸ்திரேலியா பேட்டிங் பிட்ச் போட்டால் இங்கிலாந்து பவுலர்கள் நிச்சயம் போராட வேண்டும், அதேவேளையில் ஆஸ்திரேலியா தனக்காக வேண்டி கொஞ்சம் புற்களை பிட்சில் வளர்த்தால் அது இங்கிலாந்தின் பவுலர்களுக்கு அனுகூலமாக முடியும்.
பிரிஸ்பன் பிட்ச் வழக்கம் போல்தான் இருக்கும், வழக்கமான பவுன்ஸ் இருக்கும், ஸ்விங் அவ்வளவாக இருக்காது, ஆஸ்திரேலியாவை பிரிஸ்பனில் வீழ்த்துவது காலங்காலமாகக் கடினமான விஷயம்.
மேலும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வெறுமனே வீழ்த்த மட்டும் ஆடாது, அவர்களை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷம் காட்டும் போது அது இங்கிலாந்துக்கு சில வேளைகளில் சாதகமாக முடிந்துள்ளது.
விறுவிறுப்பான தொடர் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.