தோனியை குறைந்தது டி20 கிரிக்கெட்டிலிருந்து விலக்கி மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்க்கர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து தோனி ரசிகர்கள் ட்விட்டரில் அகார்க்கரை வார்த்தையால் விளாசியுள்ளனர்.
அகார்க்கர் கருத்தை லஷ்மண், ஆகாஷ் சோப்ரா போன்றவர்களும் எதிரொலித்தனர், சோப்ரா ஒருபடி மேலே போய் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு தோனி வேண்டாம் என்றே கூறிவிட்டார்.
இதனையடுத்து அகார்க்கரை தோனி ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளனர்.
அவற்றில் சில:
ஷுபம் கவாத்ரா என்பவரது ட்விட்டரில், “தோனி பற்றிய உங்களது கருத்து உங்கள் ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீங்கள் தோனியை மதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தோனியைப் பற்றி உங்கள் கருத்து உள்ளூர் எம்.எல்.ஏ, பிரதமர் மீது விமர்சனம் வைப்பது போல் உள்ளது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இன்னொரு பதிவில், “வேறு வேலை இல்லையென்றால் ஊடக கவனத்தை ஈர்க்க பார்க்கிறீர்கள், இந்தத் தருணத்தில்தான் சில வீரர்களின் பெயர்களே தெரிய வருகிறது, உதாரணம் அகார்க்கர்; தோனியைப் விமர்சிக்க என்ன தைரியம்?” என்று கூறப்பட்டுள்ளது.
“தோனியைப் பற்றி விமர்சிக்க உங்களுக்குத் தகுதியில்லை, இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் தோனி. யார் எப்போது ஓய்வு பெற வேண்டுமென்று நீங்கள் தீர்மானித்து உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்கிறது இன்னொரு ட்விட்டர் பதிவு.
“தோனியை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் தாங்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதை யோசிக்கட்டும். அவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்கள், அஜித் அகார்க்கர் போல்” என்று இன்னொரு ட்வீட் கிண்டல் செய்கிறது.
“தோனியை விமர்சித்து பிரபலமடையப் பார்க்காதீர்கள்” என்கிறது மற்றொரு ட்வீட்.