1999-2000 தமிழ்நாடு அணிக்கு எதிரான மும்பையின் ரஞ்சி அரையிறுதிப் போட்டிதான் தான் ஆடிய சிறந்த ரஞ்சி போட்டி என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏப்ரல், 2000-த்தில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சச்சின் 233 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இதனையடுத்து மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
இந்நிலையில் மும்பை அணியின் 500-வது ரஞ்சி போட்டி சாதனையை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் சச்சின் கூறியதாவது:
நான் பேட்டிங்கில் நிற்கும் நிலையில் முன்னேயும் பின்னேயும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது ஹேமங் பதானி பாயிண்டிலிருந்து பவுலருக்கு ‘முன்னாடி, முன்னாடி’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
பந்து மாற்றப்பட்டவுடன் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனால் கிரீசில் நான் நிற்கும் நிலையில் மாற்றங்கள் செய்ய வேண்டியதாயிற்று. இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹேமங் பதானியிடம் கூறினேன், ‘எனக்குத் தமிழ் தெரியும்’ என்று.

