தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அடிக்கடி பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போய் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து சிரஞ்சீவி விசாரணையில் இறங்கினார். வீட்டு வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்த கர்னூலை சேர்ந்த தெண்ணையாக என்பவர் சந்தேக வலைக்குள் வந்தார்.
அவரிடம் சிரஞ்சீவி விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்தார். இதனால் சிரஞ்சீவி அவரை போலீசிடம் ஒப்படைத்தார். அவர்கள் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் திருடியதை ஒப்புக் கொண்டார் தெண்ணையா. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 16 லட்சம் வரை திருடியிருப்பதையும், திருட்டு பணத்தை கொண்டு பிளாட் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. போலீசார் தெண்ணையா மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
