பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் பட்டம் வென்று தாயகம் திரும்பிய கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதி ஆட்டத்தில் 21-14, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒரே ஆண்டில் 4-வது சூப்பர் சீரிஸ் பட்டம் வெல்லும் 4-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஸ்ரீகாந்த்.
கடந்த வாரம் டென்மார்க் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார். அடுத்தடுத்து இரு பட்டங்கள் வென்றுள்ள அவர், உலகத் தரவரிசைப் பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். கடந்த ஜனவரி மாதமும் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த், பிரான்சில் இருந்து நேற்று காலை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் ஸ்ரீகாந்த் கூறும்போது, “களத்தில் நான் விளையாடும்போது தரவரிசை பட்டியல் மீது கவனம் இருக்காது. வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே கவனம் இருக்கும்” என்றார்.