வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது, இதில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், வாசிம் அக்ரம் பயிற்சியாளராகச் செயல்படுகிறார்.
இந்த அணியில் முக்கிய வீரராக இலங்கையின் குமார் சங்கக்காராவும் சேர்க்கப்பட்டுள்ளார். அணி உரிமையாளர் பர்வேஸ் கான், அக்ரம், சேவாக், சங்கக்காரா கூட்டணி மூலம் தொடர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஓய்வு பெற்றதிலிருந்தே வர்ணனை, பயிற்சிப்பொறுப்பு என்று வாசிம் அக்ரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ஷார்ஜாவில் இவரது அனுபவம் தனித்துவமானது என்று குறிப்பிடத்தக்கது, ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார் அக்ரம்.
டிசம்பர் 5-ம் தேதி மராத்தா அரேபியன்ஸ் அணிக்கான வீரர்கள் தேர்வில் வாசிம் அக்ரம், கேப்டன் சேவாக் ஆகியோர் பங்கு பெறுவார்கள்.
இந்நிலையில் வாசிம் அக்ரம் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, “சேவாக் அணி கேப்டன் எனும் போதே என் உற்சாகம் அதிகரித்துள்ளது. டி10 இன்னும் குறுகிய வடிவமாகும், எனவே டி20-ஐ விடவும் மிகவும் விறுவிறுப்பாக அமையும். மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு சேவாக் கேப்டன்சியில் நான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது” என்றார் வாசிம் அக்ரம்.