Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

உலகக் கோப்பை நடத்த டெல்லி லாயக்கற்ற ஊர்!

October 10, 2017
in Sports
0
உலகக் கோப்பை நடத்த டெல்லி லாயக்கற்ற ஊர்!

2014-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைவிட அதிக ரசிகர்கள் பார்க்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறது பிரேசில். அசாதாரணமான அரசியல் சூழ்நிலை. எங்கெங்கும் போராட்டங்கள். அதுவரை இல்லாத வறுமையிலும் வறட்சியிலும் வாடுகிறார்கள் பிரேசில் மக்கள். அரசும் நிதியின்றி திக்கற்று நிற்கிறது. போதாதற்கு H1N1 வைரஸ் பரவி, பன்றிக்காய்ச்சல் முதலிய நோய்கள் வேகமாகப் பரவத் தொடங்கின. இந்நிலையில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தியாக வேண்டும். வரிசைகட்டிநின்றன பிரேசில் அரசுக்கான சவால்கள். என்ன செய்வது, போட்டிகளை எப்படி நடத்துவது, உலகக்கோப்பையை பிரச்னைகள் இன்றி நடத்திட முடியுமா?

நடத்தி முடித்தார்கள். தங்கள் நாட்டின் பாரம்பர்ய விளையாட்டு. அதைக் கொண்டாடியாக வேண்டும். அந்தப் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதில்தான் அவர்களின் கெளரவம் அடங்கியிருக்கிறது. வெற்றிகரமாக நடத்திட வேண்டும். நடத்தினார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி, நாட்டு மக்கள் பலரின் எதிர்ப்பையும் தாண்டி போட்டியை வெற்றிகரமாக முடித்தது பிரேசில். எப்போதும்போல் அது ஒரு திருவிழாவாகவே நடந்தேறியது. பிரச்னைகள் ஒருபுறம் சூழ்ந்திருந்தாலும், மறுபுறம் கால்பந்துக்குத் தாங்கள் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தனர்.

ஒவ்வொரு வீடும் பிரேசில் தேசியக் கொடியின் பச்சை வண்ணத்துக்கு மாறியது. பிரேசிலின் சுவர்கள் அனைத்திலும் நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸியின் முகங்கள். உலகக்கோப்பை தொடங்குவதற்கு பல நாள்களுக்கு முன்னரே அணிகளின் ஜெர்சி விற்பனை ஜோராகத் தொடங்கியது. வீதியெங்கும் தோரணங்கள், அலங்காரங்கள். மாதிரி உலகக்கோப்பை பொம்மைகள், மாஸ்காட் fuleco-வின் பேனர்கள், பொம்மைகள் என மார்க்கெடிங்கில் பிரேசிலும் FIFA-வும் போட்டிபோட்டு செயல்பட, பிரச்னைகள் அனைத்தையும் தாண்டி கால்பந்து என்னும் விளையாட்டு மட்டுமே இரண்டு மாத காலங்கள் அங்கு காலூன்றி நின்றது.

இந்தியாவில் 2017-ல் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவிருப்பதாக, 2013 டிசம்பரில் FIFA அறிவித்தது. கிட்டத்தட்ட, பிரேசில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு 188 நாள்கள் முன்னதாகவே, இந்த அறிவிப்பு வந்துவிட்டது. அதன்பின்னர்தான் 2014 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியது பிரேசில். ஓர் உலகக்கோப்பையை எப்படி நடத்த வேண்டும் என்பதை பிரேசில் நாட்டிடமிருந்து இந்தியா கற்றிருக்க வேண்டும்; எப்படியெல்லாம் `புரமோட்’ செய்யலாம் எனப் பாடம் பயின்றிருக்க வேண்டும். ஆனால்..?

‘டிஜிட்டல் இந்தியா’ என்ற வாசகத்தை ஒவ்வொரு மேடையிலும் கூவிக்கொண்டிருக்கும் இந்த அரசு, டிஜிட்டல் தளத்தில் மட்டுமே இந்தத் தொடரை Promote செய்தது. நவம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ.எஸ்.எல் தொடருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே விளம்பரங்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றனர். உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய சோனி நிறுவனமோ ஏதோ கடனுக்கு உலகக் கோப்பையை ‛புரமோட்’ செய்தது. ட்விட்டரில் மட்டும் வீரர்களைப் பற்றிய குறிப்புகள், பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டது இந்தியக் கால்பந்து நிர்வாகம். பி.வி.சிந்து பிள்ளையார்சுழி போட, பிரபலங்கள் மத்தியில் கொஞ்சம் பாப்புலர் ஆனது `#JuggleLikeAChamp’. மூன்று கிரிக்கெட் அணிகளை நடத்திவரும் ஷாரூக் கானுக்கு, சோனு சூட் சவால் விட, மனிதன் கால்பந்தைப் பிரபலப்படுத்த மூச்சுகூட விடவில்லை. கடைசியில் அதுவும் ஒரு வாரத்தில் ஆஃப் ஆனது. கோலி, அக்‌ஷய் குமார் போன்றோர்கூட ட்விட்டரில் வீடியோ போட்டு வாழ்த்தினர். ஆனால், அரசு செய்த முயற்சிகள்?

புதுடெல்லி அசோகா சாலையில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்துக்கும், உலகக்கோப்பை தொடங்கிய நேரு மைதானத்துக்கும் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம். வழிநெடுக அத்வானி, மோடி, உள்ளூர் பா.ஜ பிரஜைகளின் முகங்கள் அலங்கரிக்கும் பேனர்கள். மாபெரும் ஒரு தொடர் நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எங்குமே இல்லை. ஒரு பேனர்… ஒரு போஸ்டர்… எதுவும் இல்லை. அந்தக் கட்சி அலுவலகத்துக்கும் நேரு ஸ்டேடியத்துக்கும் நடுவில்தான் `இந்தியா கேட்’. டெல்லியின் மிக முக்கிய சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் இடம். அங்குகூட உலகக்கோப்பைக்கான விளம்பரம் ஏதும் இல்லை. கால்பந்து உலகக்கோப்பை நடப்பதாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரே போர்டு, மாநகரக் காவல்துறை வைத்திருந்த `Parking’ தொடர்பான போர்டு மட்டுமே.

கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் யூரோ கோப்பை நடந்தது. ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும், வெற்றி பெற்ற நாட்டின் கொடியைக் குறிக்கும் வகையில் ஃபிரான்ஸ் நாட்டின் மாபெரும் நினைவுச்சின்னமான `ஈஃபிள் டவர்’ வண்ண விளக்குகளால் ஜொலித்தது. 2014 உலகக் கோப்பையின்போதும் பிரேசிலின் ‘கிறிஸ்ட் தி ரெடீமர்’ சிலையும் வெற்றிபெற்ற நாடுகளின் கொடி நிறத்தைச் சுமந்தது. இப்படிப் போட்டியை நடத்திய நாடுகள், தங்களால் எப்படியெல்லாம் போட்டியைப் பிரபலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் பிரபலப்படுத்தின. இங்கும் மத்திய அரசும் டெல்லி அரசும் சோடைபோயின. பயணிகள் வந்துபோகும் ரயில் நிலையங்களில்கூட இந்தப் போட்டிக்கான விளம்பரங்கள் எங்கும் இல்லை.

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு, இந்தப் போட்டிக்காகச் சிறிதும் மெனக்கிட்டதுபோல் தெரியவில்லை. யூனியன்பிரேதசம்தானே… தனிப்பிரதேசம் இல்லையே? சுமார் 27,000 பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் முதல் உலகக்கோப்பைப் போட்டியை நேரடியாகக் காணவிருந்ததால், அவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றியதும், பாதுகாப்புக்கு போலீஸாரை அனுப்பியதும் மட்டுமே டெல்லி அரசு உலகக்கோப்பைப் போட்டிக்குச் செய்த உதவி. டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், வெடிகள் ஏதுமின்றி ரசிகர்களின் கோஷத்துக்கு இடையில்தான் போட்டி தொடங்கியது. ப்ரோ கபடிப் போட்டிகள் சென்னைக்கு முதல்முதலாக வந்தபோதுகூட அதன் வரவேற்பு இதைவிடச் சிறப்பாக இருந்தது.

தொலைக்காட்சி, ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் மூழ்கிக்கிடந்த டெல்லிவாசிகளுக்கு மட்டுமே கால்பந்து உலகக்கோப்பை தங்கள் ஊரில் நடப்பது தெரிந்தது. புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு அருகில் ரிக்‌ஷா ஓட்டுபவர்களுக்கு, ஆங்கிலம் தெரியாததால் ‘ஓலா ஆப்’பிலும் இந்தியையே பயன்படுத்தும் டிரைவர்களுக்கு, நிர்வாகப் பயிற்சிக்காக ஒரு மாதம் விடுதியில் தங்கிப் பயின்றுவந்த தமிழருக்கு, ஹோட்டலில் வேலைசெய்யும் `ரூம் பாய்’க்கு எனப் பலருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடக்கிறது என்பதே தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியாவால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொண்டுசேர்த்திட முடியுமா? இந்தத் தொடர், நம் நாட்டு கால்பந்து வீரர்களுக்கான அங்கீகாரம், ஒரு FIFA தொடரை நடத்துவது என்பது மாபெரும் பெருமை. தன் தேசத்து மக்களுக்கே தெரியாமல் ஒரு தொடரை நடத்திக்கொண்டிருக்கிறது நம் அரசு!

தூய்மை இந்தியா… ஊர் ஊராக துடைப்பத்தை எடுத்துக்கொண்டு திரிந்த படை ஒருமுறை மைதானம் பக்கம் போய் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாலையின் ஒருபுறம் மாணவர்கள் மைதானத்துக்கு நடந்துகொண்டிருக்க, மறுபுறம் புழுதி பறக்க சுத்தம்செய்துகொண்டிருந்தார்கள் துப்புரவுப் பணியாளர்கள். உலகக்கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர்வரை சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது மைதானம் அமைந்திருக்கும் இடம். மைதானத்துக்கு உள்ளே இன்னும் மோசம். நாற்காலிகளில் படிந்திருந்தது ஒரு வாரத் தூசு. தாங்கள் கொண்டுவந்திருந்த கைக்குட்டை, பேப்பர் போன்றவற்றை உபயோகித்துதான் அமரவேண்டியதாக இருந்தது. அந்த நாற்காலிகளின் நடுவே ஸ்டேடியத்தின் ஸ்க்ரீன் சைஸில் வைக்கப்பட்டிருந்தது `ஸ்வச் பாரத்’ விளம்பரப் பதாகை. இவர்கள் மைதானத்துக்கு வெளியே உலகக்கோப்பையைப் பற்றி ஒரு பேனர்கூட வைக்கவில்லை.

வந்திருந்த 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதைக் கொடுக்க சரியான ஸ்டால்கள் இல்லையே. மொத்த மைதானத்திலும் வெறும் மூன்று – நான்கு இடங்களில் மட்டுமே வைத்துக்கொடுக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் முட்டிக்கொள்ள, பெரும் போராட்டமே நடந்தது. தண்ணீர் இல்லை. அங்கு விற்கப்படும் தண்ணீர் ஒரு லிட்டர் 50 ரூபாய்! இலவச டிக்கெட் கொடுத்து மாணவர்களைக் கூட்டிவந்தோம் எனப் பெருமை பேசியவர்கள், 15 வயது சிறுவர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் தரவில்லை.

சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அந்த அட்டைகளை எங்கு போடுவது? குப்பைத்தொட்டிகள் ஒழுங்காக அமைக்கப்படவில்லை. குப்பைத்தொட்டியானது மைதானம். நடக்கக்கூட முடியாத அளவுக்கு வழியெங்கும் குப்பைகள். அடுத்த இரண்டு நாள்களில் அடுத்த போட்டி. அதற்குள் அந்த மொத்த மைதானத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும். திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்களின் வாசலிலேயே தோற்றுப்போனது `ஸ்வச் பாரத்’.

20,000 பள்ளிச் சிறுவர், சிறுமியர் போட்டியைக் கண்டுகளித்தனரா… இந்திய அணிக்கு ஆதரவு அளித்தனரா? தண்ணீர், சிற்றுண்டி என வெளியே போக, உள்ளே வர, கடைசி வரை அவர்கள் அனைவரும் மைதானத்துக்குள் அமர்ந்திருந்த தருணங்கள் குறைவே. மேற்குவங்கம்கூட 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், கால்பந்து ஆர்வம் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் அவர்கள் தீர்க்கமாக உள்ளனர். மைதானத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சரி, மைதானப் பணியாளர்களுக்கும் சரி, சிரமத்தை உண்டாக்கியதுதான் மிச்சம். இவர்கள் பள்ளி வேனிலிருந்து இறங்கி மைதானம் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது பள்ளிக்கூடம் போகாத சிறுவர்கள் சிலர் ஏக்கத்தோடு இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒருவன், தான் அணிந்திருந்த ரியல் மாட்ரிட் ஜெர்சியில் தன் வியர்வையைத் துடைக்க, பிர்லோவைப்போல் `அவுட்-ஃபூட்டில்’ கல்லை உதைத்துக்கொண்டிருந்தான் இன்னொருவன். இவர்களுள் கால்பந்து உலகக்கோப்பையைப் பார்க்கத் தகுதியானவர்கள் யார்? அதைப் பார்ப்பதற்கான தகுதி படிப்பா… விளையாட்டின் மீதான காதலா?

டிக்கெட் வாங்கி வந்தவர்களுள் பலரும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள், அங்குமிங்கும் நடந்து செல்ஃபி எடுப்பது, வெளியிலிருந்து கோக் வாங்கிக்கொண்டு வருவது என மூவிங்கிலேயே இருந்து கால்பந்துக் காதலர்களை ரணமாக்கினர். இந்திய அணி மூன்றாவது கோல் வாங்கியபோது அரங்கத்தில் பாதிக்கும்மேல் காலியானது. கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்தவர்கள்போல், தோல்வியை நோக்கி அணி பயணித்ததும் கிளம்பிச் சென்றார்கள். அதுவா கால்பந்துக்கு அழகு? ஆட்டம் முடிந்த பிறகு, ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் வீரர்களைப் பாராட்டுவதும், வீரர்கள் அணிவகுத்து ரசிகர்களுக்கு நன்றி சொல்வதும்… அதுவே கால்பந்தின் அழகான நெகிழ்ச்சியான தருணம். அந்த 17 வயது இளம் வீரர்கள் தோல்விக்குப் பிறகு கேலரியில் ரசிகர்களை நோக்கி நடந்தபோது அங்கிருந்தது சுமார் பத்து முதல் பதினைந்தாயிரம் ரசிகர்களே. அவர்களுள் பெரும்பாலானோர் கால்பந்தை மிகவும் நேசிக்கும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி ரசிகர்களைக் குற்றம் சொல்லியும் தப்பில்லை. அங்கு கால்பந்து கலாசாரம் என்பது அறவே கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலோ, கொல்கத்தா, கோவா, கொச்சி போன்ற நகரங்களிலோ இருப்பதுபோல் அங்கு கால்பந்தைக் காதலிக்கும் வெறியர்கள் இல்லை. கால்பந்தின் பிதாமகன் டீகோ மரடோனா கொச்சினுக்கோ, கொல்கத்தாவுக்கோ வருவதற்கான காரணம் அதுதான். கோடி ரூபாய் கொடுத்தாலும் கால்பந்து ரசிகர்கள் இல்லாத டெல்லி போன்ற ஊர்களில் உலகக்கோப்பை வாங்கிய அந்தக் கால்கள் களமிறங்காமல், கொல்கத்தா, கோவா, கொச்சி, கவுஹாத்தி எனக் கால்பந்தைக் கொண்டாடும் இடங்களிலும் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தலாம்.

அப்படியிருக்கையில் ஏன் இந்திய அணியின் மூன்று போட்டிகளிலும் டெல்லியிலேயே நடக்க முடிவுசெய்யப்பட்டது?
FIFA-வின் ஆலோசனைப்படி ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு மைதானம் என முடிவுசெய்யப்பட்டது. போட்டியை நடத்தும் அணி எப்போதும் ஏ பிரிவில்தான் இடம்பெறும். முதலில் ஏ பிரிவுக்கான போட்டிகள் நடத்த முடிவுசெய்யப்பட்ட இடம் மும்பை. இந்தியாவில் போட்டி நடக்கிறது. பிரதமர், முதல் போட்டியில் பங்கேற்றாக வேண்டும். போட்டிகள் டெல்லிக்கு மாற்றப்படுகின்றன. போட்டியைத் தொடங்கிவைத்த பிரதமர், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போட்டியைக் காண இரண்டு மணி நேரம்கூட ஒதுக்காமல் கிளம்பிப் போகிறார். இனி ரசிகர்களைக் குறை கூறி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் வெறும் பொழுதுபோக்காகத் தெரிந்தாலும், அது ஒரு நாட்டின் கெளரவம். கத்தார் – 2022 உலகக்கோப்பையை நடத்தும் நாடு. பல ஊழல்கள் நடந்துதான் கத்தாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஓர் உலகக்கோப்பைப் போட்டி நடத்துவதற்கு எத்தனையோ கோடிகள் கொட்டியது கத்தார். வெறும் விளையாட்டுத் தொடர்தான். அதற்காக ஏன் அத்தனை ஊழல்கள் செய்து, பல நாட்டு அதிபர்களை வளைத்துப்போட்டு, பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும்? காரணம், உலகக்கோப்பைக் கால்பந்தை நடத்துவது அந்நாட்டின் மரியாதையை உலக அளவில் பல மடங்கு அதிகரிக்கும். அதை கத்தார் நன்கு அறிந்திருந்தது. வெறும் எண்ணெய் விற்கும் நாடாக மட்டும் அறியப்படாமல், பன்முக அடையாளம் வேண்டும் என்று நினைத்த அந்நாட்டு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தது, FIFA உலகக்கோப்பை தங்களின் எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்று.

சிறப்பாக நடத்தியிருக்கும்பட்சத்தில் இந்தியாவுக்கும் இது பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும். வெறும் தலைநகரம் என்பதற்காக அல்லாமல், அந்த விளையாட்டை மதிக்கும், விளையாடும் வீரர்களை கெளரவப்படுத்தும் இடத்தில் நடத்துவதே அந்த விளையாட்டுக்குத் தரும் மரியாதை. அந்த வகையில் கால்பந்து உலகக்கோப்பை என்னும் மாபெரும் தொடருக்கு, அதை நேசிக்கும் ரசிகர்களுக்கு, அங்கு விளையாடிய 21 இந்தியர்கள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் டெல்லி இழைத்தது அவமானமே! முதல் உலகக்கோப்பைத் தொடர் என்பதற்காக இந்தக் குறைகளைச் சகித்துக்கொள்ளவும் முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே காமென்வெல்த் போட்டியை நடத்திய ஊர். பல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியவர்கள். அடிப்படை வசதிகளைச் சரிசெய்து, `நாங்களும் போட்டி நடத்துகிறோம்’ என்ற அளவுக்காவது நடத்தியிருக்கலாமே?

இவற்றையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லக் காரணம் இல்லாமல் இல்லை. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கிறது 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை. அந்தத் தொடரையும் நடத்த முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது இந்தியா. அப்படி அந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பைப் பெறும்போதாவது, ஓர் உலகக்கோப்பைக்குத் தரவேண்டிய மரியாதையை நாம் தரவேண்டும். இல்லையேல், உலக அரங்கில் நமக்கான மரியாதையையும் இழக்க நேரிடும்.

Previous Post

நானும் மனிதன் தான், தவறுகள் செய்வது இயல்புதான்: முஷ்பிகுர் ரஹிம்

Next Post

கோஹ்லியினால் ஓரம்கட்டப்படும் அஷ்வின்?

Next Post
கோஹ்லியினால் ஓரம்கட்டப்படும் அஷ்வின்?

கோஹ்லியினால் ஓரம்கட்டப்படும் அஷ்வின்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures