வடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் சேர்ந்து தென்சீன கடலில் போர் ஒத்திகையை நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான ரொனால்ட் ரீகன், தென் சீன கடலில் முகாமிட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து எஃப் 18 ரக சூப்பர் ஹார்னிக் ஜெட் விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து ஒத்திகையில் ஈடுபட்டன.
சீனாவின் கரையிலிருந்து 748 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க போர் கப்பலில் இருந்து நடத்தப்படும் ஒத்திகையை சீன கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனிடையே தென்கொரிய ராணுவ தினத்தையொட்டி சியோலில் பேசிய அந்நாட்டு அதிபர், வடகொரியாவின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றார்.
மேலும் பேசிய அதிபர் மூன் ஜே இன், நமது உடனடி இலக்கு தெளிவானது. வடகொரியாவின் போரை தூண்டும் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவுடனான நமது உறவு நல்ல முறையில் உள்ளது. சர்வதேச சமூகமும் நமக்கு ஆதரவாக தான் உள்ளது என்றார்.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி ஆகியவற்றை தடுக்கும் விதத்தில் கூட்டு போர் பயிற்சி நடத்தப்படும் என அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறியுள்ளன. ஐ.நா-வின் தடைகளை மீறி வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டிற்கு போர் மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்கா, பசிபிக் கடலில் தனது படைப்பெருக்கத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.