பெட்ரோல்-டீசல் விலை உயர்வை நியாயப்படுத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் என்ன ஏழைகளா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெட்ரோல் விலை, மார்க்கெட் நிலவரப்படி இருந்த நிலை மாறி தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.5 ஒரு வாரத்திற்குள் உயர்ந்திருக்கிறது. டீசல் விலை ரூ.4.05 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில், பெட்ரோலை யார் வாங்குகிறார்கள். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர்தானே வாங்குகின்றனனர். அவர்கள் என்ன ஏழைகளா அல்லது பட்டினி கிடப்பவர்களா.
அவர்களால் வாங்க முடியும், அதனால் வாங்குகின்றனர். பெட்ரோல் மீது கிடைக்கும் வரி மூலம் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளில்தான் செலவிட்டு வருகிறது என்றார். இதேபோல் கடந்த 8-ஆம் தேதி இந்தியாவில் மாட்டிறைச்சி மீதான தடையால் சுற்றுலா துறை பாதிப்பை சந்திக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அவரவர் நாடுகளில் மாட்டிறைச்சியை உண்டுவிட்டு இந்தியாவுக்கு வரட்டும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.