ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களில் அதிகமானோர் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளனர். இது, இந்திய அணிக்கு சிக்கலை தரலாம்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடக்கவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் ஒரு நாள் தொடரில் (2015) வீழ்ந்தது. பின், இந்தியா வந்த நியூசிலாந்து (3–2), இங்கிலாந்து (2–1) அணிகளுக்கு எதிரான தொடரை வென்றது. இந்த வெற்றிநடை எதிர் வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் தொடரும் என நம்பப்படுகிறது.
உதவியாக இருக்குமா: ஆசிய மண்ணில் ஆஸ்திரேலியா தடுமாறும் என்றாலும், ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் அனுபவம் இவர்களுக்கு கைகொடுக்கலாம். இந்திய ஆடுகளங்களின் தன்மையை ‘ஸ்கேன்’ செய்து வைத்துள்ளனர். ஒரு நாள் தொடரில் இடம்பெற்றுள்ள 16 ஆஸ்திரேலிய வீரர்களில் 14 பேருக்கு ஐ.பி.எல்., அனுபவம் உள்ளது. ஏகார், கார்ட்ரைட் மட்டுமே இத்தொடரில் விளையாடியது இல்லை.
வார்னர் ஆதிக்கம்: அதிகபட்சமாக துவக்க வீரர் வார்னர் ஐ.பி.எல்., அரங்கில் 114 போட்டிகளில் 4014 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2016ல் ஐதராபாத் அணிக்கு தலைமை ஏற்று கோப்பையும் வென்று தந்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய ஆடுகளம் என்றாலே, உற்சாகம் அடைந்துவிடுவார்.
கடந்த ஐ.பி.எல்., ‘சீசனில்’ புனே அணியை வழிநடத்திய இவர், பைனல் வரை அழைத்து சென்றார். இத்தொடரில், இதுவரை ஸ்மித் 69 போட்டியில் ஒரு சதம், 5 அரை சதம் உட்பட மொத்தம் 1703 ரன் குவித்துள்ளார். ‘சுழலை’ அசாத்தியமாக எதிர் கொள்ளும் மேக்ஸ்வெல், இளம் வீரர் டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் என ஐ.பி.எல்., தொடரில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களின் பட்டியல் நீள்கிறது.
குறைவான வேட்: பவுலர்களை பொறுத்தவரை, சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா கடந்த ‘சீசனில்’ புனே அணியில் விளையாடினார். ‘வேகத்தில்’ எடுத்துக்கொண்டால் கம்மின்ஸ், கூல்டர் நைல், ரிச்சர்ட்சன் அனைவரும் ஐ.பி.எல்., போட்டிகளில் கால் பதிந்தவர்கள்தான். தற்போதைய, ஆஸ்திரேலிய அணியில் கீப்பர் மாத்யூ வேட் மட்டுமே குறைந்த ஐ.பி.எல்., போட்டிகளில் (3) விளையாடியவர். ஒட்டுமொத்தத்தில், இம்முறை இந்திய அணியினருக்கு ஆஸ்திரேலிய வீரர்களின் ஐ.பி.எல்., அனுபவம் பெரும் தலைவலியை தரலாம்.