இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் ஒரே நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 4 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இவர்களையும் தென் ஆப்ரிக்கா அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தனித்தனியாக 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் சில நாட்கள் இடைவெளியில் பங்கேற்பர். இப்படி இரு அணிகளும் ஒரே நேரத்தில் போட்டிகளில் கலந்து கொள்வது, முதல் முறையல்ல. ஏற்கனவே, 2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர். ஆண்கள் அணியினர் ஜன.12–17 வரையும், பெண்கள் அணியினர் ஜன. 26–31 வரையும் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், இரு இந்திய அணியும் தொடரை வென்றது.
இந்த திட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.