வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பா.ம.க. சார்பில் வரும் 17-ம் தேதி விழுப்புரத்தில் “சமூக நீதி மாநாடு” நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று இம்மாநாட்டுத் திடலை பார்வையிட்டார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 1987ல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு முன்னும், பின்னும் இதுபோல் இந்தியாவில் ஒரு போராட்டமே நடந்ததில்லை. இதில், ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டு, 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோயினர். அவர்களுக்காக ஆண்டுதோறும் பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.
நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையே இல்லை. கடந்த 2007-ல் மருத்துவ மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு ஒன்றை கொண்டுவந்தார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஆட்சியே நடக்காதபோது போராட்டங்கள் நடத்தி என்ன பயன். தமிழக ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்கவில்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். இதுபோன்ற தருணத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவதைவிட காட்டுக்கே அனுப்பலாம்” என்றார்.
