பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸும், முன்னாள் மாடல் அழகி ரியா பிள்ளையும் கடந்த 2005 முதல் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பயஸ் அவரது தந்தையுடன் இணைந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் பிரிந்து வாழ விரும்புவதாக கடந்த 2014-ல் மும்பை நீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்தார்.
தனக்கு வீடு உள்ளிட்ட பொருட்களை வாழ்க்கை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் ரியா தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், இருவரும் திருமணம் செய்து கொள்ளாததால் பாரமரிப்பு தொகையை கோர முடியாது என தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து ரியா பிள்ளை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் விசாரித்த நீதிபதிகள், விசாரணையை மும்பையில் உள்ள பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை 6 மாத காலத்துக்குள் முடிக்கவும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ரியா பிள்ளை தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் பாந்த்ரா நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், வழக்கு முடியும் வரை இழப்பீடு தொகையாக லியாண்டர் பயஸ் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ரியா பிள்ளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குன்ஜன் மங்க்லா, அம்னா உஸ்மான் ஆகியோர் இழப்பீடு தொகை கேட்டு தாக்கல் செய்த இடைக்கால மனுவில் ரூ.100 லட்சம் என்பதற்கு பதிலாக தவறுதலாக ஒரு ஜீரோவை குறைத்து ரூ.10 லட்சம் என்று குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

