2019 உலகக்கோப்பையில் தான் விளையாடுவதை தன் மனைவி பெரிதும் விரும்புவதாகக் கூறிய விருத்திமான் சஹா, அதற்காக கடினமாக உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.
“என் மனைவி நான் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியே ஆக வேண்டும் என்பதில் தீவிர விருப்பம் கொண்டுள்ளார், அந்த இடத்துக்கு நான் என்னை நகர்த்திக் கொள்ள வேண்டும் என்று என்னை எப்போதும் அவர் வற்புறுத்தி வருகிறார். நானும் முயற்சி செய்து வருகிறேன், ஆனால் அணித்தேர்வாளர்கள் கையில்தான் முடிவு உள்ளது.
எந்த ஒரு வீரரும் எல்லா வடிவத்திலும் ஆடவே விரும்புவார்கள். ஆனால் இது தேர்வுக்குழுவின் கையில்தான் உள்ளது. என்னுடைய தயாரிப்பு எப்போதும் என் ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்துடன் தான் உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே நான் தயாரித்துக் கொள்வதில்லை.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்கள் கடினமானவை. ஆனால் உள்நாட்டில் பெற்ற உத்வேகத்தை அயல்நாட்டிலும் தக்க வைக்க வேண்டும். வெளியிலும் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தியாவின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் நன்றாக உள்ளது. 2019 உலகக்கோப்பைக்காக இந்திய அணி தயாரிப்பில் இருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் சுழற்சி முறையில் வீரர்கள் ஆடுகின்றனர். ஆனால் எந்த வீரர்கள் வந்தாலும் இந்திய அணி சிறப்பாக ஆடுகிறது இது ஒரு நல்ல அறிகுறி.
அக்சர், சாஹல், குல்தீப் ஆகியோர் ஆடுகின்றனர், அஸ்வின், ஜடேஜாவை வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.
கவுன்ட்டி கிரிக்கெட் பற்றி இப்பொதைக்கு சிந்திக்கவில்லை, குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறேன்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவது கடினமே. கடந்த முறை ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடினர், ஆனால் இந்த ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு” என்றார் விருத்திமான் சஹா.

