2006-07 காலக்கட்டம் இந்திய கிரிக்கெட்டின் மோசமான காலக்கட்டம் என்று லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின், “2006-07 காலக்கட்டம் இந்திய கிரிக்கெட்டின் தாழ்வான காலக் கட்டமாகும். 2007 உலகக்கோப்பையில் சூப்பர் 8 கட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறாமல் வெளியேறியது.
ஆனால் அங்கிருந்து புதிய முறையில் சிந்திட்த்து, புதிய திசையை நோக்கி பிரயாணித்தோம். நாங்கள் நிறைய மாற்றங்களைச் செய்தோம். ஒரு அணியாக திரண்டு என்ன சாதிக்க வேண்டும் என்பதை திட்டமிட்ட பிறகே நாங்கள் அதற்கு கடமையுடன் பணியாற்றினோம் முடிவுகளும் அதற்குத் தக்கவாறு வெற்றியாக அமைந்தது.
நிறைய மாற்றங்களைச் செய்தோம் அது சரியா தவறா என்று தெரியாது, மாற்றம் ஒர் இரவில் ஏற்பட்டதல்ல, நல்ல முடிவுகளுக்காக நாங்கள் காத்திருந்தோம், என் கிரிக்கெட் வாழ்நாளில் 21 ஆண்டுகள் அழகான உலகக்கோப்பையை வெல்ல காத்திருந்தேன்” என்றார்.
சச்சின் குறிப்பிடும் இந்திய கிரிக்கெட்டின் ‘பின்னடைவு’ காலக்கட்டம் கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டமே. இந்திய கிரிக்கெட்டின் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் எழுந்த காலக்கட்டமும் இதுவே. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திய அணி 17 ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டி தொடர்ச்சியாக வெற்றி பெற்றதும் நடந்தது. இதில் 15 போட்டிகளுக்கு ராகுல் திராவிட் கேப்டன், 2 போட்டிகளுக்கு சவுரவ் கங்குலி கேப்டன்.
இதற்கு முன்பாக மே.இ.தீவுகள் அணிதான் தொடர்ச்சியாக 14 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்து வெற்றி பெற்றிருந்தது.
இதே காலக்கட்டத்தில்தான் ராகுல் திராவிட் தலைமையில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது, அதாவது 1971 தொடருக்குப் பிறகு இந்தியா மே.இ.தீவுகள் சென்று டெஸ்ட் தொடரை வென்றது.
கிரெக் சாப்பலின் சில அதிரடி செயல்பாட்டினால் கங்குலி தன் கேப்டன்சியை இழந்தார், இதே அதிரடி முறையினால் சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அதிருப்தி அடைந்ததில் ராகுல் திராவிட் கேப்டன்சியும் சிக்கலுக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 17 ஒருநாள் போட்டிகளில் விரட்டலில் தொடர்ச்சியாக வென்ற ஒரு காலக்கட்டத்தை சச்சின் இந்திய கிரிக்கெட்டின் தாழ்வான காலக்கட்டம் என்று கூறுவது சற்றே சிக்கல் நிரம்பியதாகத் தெரிகிறது.