கலைக்கு மொழி, எல்லை கிடையாது என்று ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஸ்பைடர்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடவுள்ளது லைகா நிறுவனம்.
‘ஸ்பைடர்’ தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:
10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் ‘ஒக்கடு’ படத்தைப் பார்த்தேன். அப்படம் வெளியாகி 3 வாரம் ஆன படத்தை கூட ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் ’போக்கிரி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் ’துப்பாக்கி’ படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.
மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். எனக்கும் உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே மகேஷ்பாபு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர்கானுக்குப் பிறகு, படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்க வேண்டும் என்றால் கூறுங்கள் தேதிகள் தருகிறேன் என்று சொன்ன நாயகன் என்றால் அது மகேஷ்பாபு மட்டுமே. இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும்.
ஹாரிஸ் ஜெயராஜ் திரைக்கதை தெரிந்த ஒரு இசையமைப்பாளர். இந்த படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. நாயகனாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த எஸ்ஜே சூர்யா, இதில் வில்லனாக நடிக்க கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் 2000 பேர் நடித்திருக்கிறார்கள். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு அதை வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன். மகேஷ்பாபு நானே பயப்படும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
கலைக்கு மொழி, எல்லை கிடையாது. அதற்கு சமீபத்திய உதாரணம் சீனாவில் 1000 கோடி வசூல் செய்த ‘டங்கல்’. இப்போது புதிதாக வரும் நாயகர்கள் கூட இரண்டே படங்களில் ஏதேதோ பட்டத்தைப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் மகேஷ்பாபுவுக்கு பட்டம் போட்டுக் கொள்வதில் ஆர்வமில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘மூன்று முகம்’ பட ரீமேக்கில் மகேஷ்பாபு நடித்தால் சிறப்பாக இருக்கும்
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.