ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் கலக்கத்தில் உள்ளனர்.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசம் மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளும் வந்துகொண்டிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக செப்டம்பர் 4 அன்று ஒரு வழக்கு வந்தது. இதில் பதில் அளித்த மத்திய அரசு, மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி இந்தியா வந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்க இயலாது எனக் கூறியது.
அகதிகளை ஏற்கமுடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்து செப்டம்பர் 11 ம் தேதி கூறும்படி நீதிமன்றம் மீண்டும் கோரியுள்ளது.
எப்போது வந்தார்கள்?
இதற்குமுன்னர் 2012லும் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது. மியான்மரில் அப்போது மேற்கு மாகாணமான ராக்கைனில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக சிறிய கலவரமாகத் தொடங்கி பெரிய கலவரமாக பரவியபோது அங்கிருந்து ஏராளமான முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.
ராக்கைனில் வாழமுடியாத சூழ்நிலை உருவானபோது, இந்தியா வந்த சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை உள்ள அகதிகள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு அனுமதிக்கப்பட்ட முகாமுக்கு வந்து சேர்ந்தனர்.
வங்கதேசம் வழியாக வந்த ரோஸிங்யர்கள் படகிலும் சாலை வழியாகவும் கொல்கத்தாவை அடைந்தனர். வந்தவர்களின் எண்ணிக்கை 2012ல் இருந்கே சற்றே குறையத் தொடங்கியது. அதற்குக் காரணம் சிலர் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் கேரளா என சென்றுவிட்டதுதான்.
தற்போது கேளம்பாக்கம் முகாமில் 19 ரோஹிங்ய குடும்பத்தைச் சேர்ந்த 94 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 52 பேர் வளரிளம் பருவத்துக்குட்பட்டவர்கள்.
எங்கு வாழ்கிறார்கள்?
சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேளம்பாக்கத்தில் ஒரு பழைய கட்டட வளாகத்தில் ரோஹிங்க்ய குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலில் பாதிக்கப்பட்டவர்ளுக்கான புகலிடமாகத்தான் இக்கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தைச் சுற்றியுள்ள வளாகத்தின் திறந்தவெளியில் மரத்தாலான, பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் 15 ரோஹிங்ய அகதிகள் தங்கியுள்ளனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள ரோஹிங்கியர்களைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு அகதிகளுக்கான ஐ.நா.வின் துணைத் தூதரக அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் தேடி வந்தனர்.
ஐ.நா.அதிகாரிகள் வருகை
இதற்கு தமிழக அரசின் ஆதரவையும் அவர்கள் நாடினர். கேளம்பாக்கத்தில் அவர்களின் தங்குமிடத்தை ஐ.நா. அதிகாரிகள் காண்பதற்கு தமிழக அரசு தனது ஒப்புதலை வழங்கியது.
அதன்படி அவர்களைத் தேடி வந்த ஐ.நா. அதிகாரிகள் குழு முகாம் வசதிகள் குறித்தும் அகதிகள் குறித்தும் ஆய்வு செய்தது.
சென்னை வந்துள்ள ரோஹிங்யர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் (UNHCR)இன் சென்னை அலுவலகம் பதிவுசெய்துகொண்டு சென்றது.
கேளம்பாக்கம் ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை, ஒரு நர்ஸிங் ஹோம் மற்றும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு சலசலக்கும் புறநகர்ப்பகுதியான கேளம்பாக்கம் ரோஹிங்யர்கள் சிரமமின்றி வாழ்வதற்கான ஒரு வசதியான இடமாக காணப்படுகிறது. முகாமிலுள்ள பெரும்பாலானோர் வேலைகள் பெற்றுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள சாலையை சற்றே கடந்தால் அவர்களது முகாம் இருக்குமிடத்தை அடைந்துவிடலாம்.
அங்கு அகதிகள் தேவையான நேரத்திற்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூர்க்கய்தா குறிப்பிடும்போது அரை கிலோ மீட்டர் நடந்தால் ஒரு தொடக்கப்பள்ளி வரும். அங்குதான் எங்கள் குழந்தைகள் இலவசக் கல்வி பெற்று வருகின்றனர். என்கிறார் நூர்க்கய்தா ஒரு 17 வயது பெண், பள்ளிக் கல்வியை பாதியில் விட நேர்ந்துள்ள இவருக்கு மூனறு தங்கைகள் இரண்டு தம்பிகள் உள்ளனர்.இங்கு அடிப்படை வசதிகள் பற்றி பேசும்போது, ஒரு முக்கிய பிரச்சனையை தமிழிலேயே குறிப்பிட்ட நூர்க்கய்தா, ”ஆரம்பத்தில் நான்கு கழிவறைகள் இருந்தன.
தற்போது இரண்டுதான் பயன்படுத்தும் நிலையில் உள்ளன. அந்த இரண்டிலேயே இங்குள்ள அனைவரும் பயன்படுத்த முடியுமா?” என்று கேட்கிறார். ரோஹிங்ய சமுதாயத் தலைவர் நூர் முகம்மது குறுக்கிட்டு, ”உரிய அதிகாரிகளிடம் இன்னும் நல்ல விடுதிவழங்குவதற்கு கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
மியான்மர் நிகழ்வுகள் பற்றி அறிந்திருக்கிறார்களா?
அகதிகள் முகாமில் ஒரேஒரு தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. மற்றபடி மியான்மரில் மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இயலாதவகையில் கண்காணிப்பாளர்கள் தடுத்துள்ளனர் என்று செல்வி. நூர்க்கய்தா கூறுகிறார். ஒரு இடைநிறுத்தத்தின் பின்னர், முகாமில் உள்ள அனைத்து பெரியவர்களும் தங்கள் மாகாணத்தில் வன்முறை சமீபத்திய வெடிப்பு பற்றி “மிகவும் கவலை கொண்டுள்ளதை” ஒப்புக்கொள்கிறார்.
ராக்கைனில், கடந்த இரு வாரங்களில் வன்முறை அதிகரித்து, பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களை வங்கதேசத்திற்குத் தப்பியோடச் செய்துள்ளது.
உச்சநீதி மன்றத்தில் நாளைய தீர்ப்பு
“இவர்களில் யாரும் இந்த நாட்களில் சரியாக தூங்கவில்லை. அவர்களில் சிலர் உடைந்து போயிருக்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார். இந்தியாவில் ரோஹிங்க்ய அதிகளுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பதை நாளைய உச்சதீமின்ற தீர்ப்பு சொல்லப்போகிறது.
இந்நிலையில் தீர்ப்பு பாதகமானால் அவர்களின் நிலை? வெளியேற்றப்பட்டால் என்ன செய்வது?
“எங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த மாதிரி எதையும் நான் கேட்டதில்லை” என்கிறார் திரு நூர் முகமது.
ஆனால் நூர்க்கய்தா அமைதியிழந்து காணப்படுகிறார்.
“நாங்கள் எங்கு போவோம்? இந்த உலகத்தில் எங்களுக்கென்று ஒரு இடம் இருக்காதா?” என்று மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து தப்பியோடிவரும் சூழ்நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் ஆதங்கத்தோடு கேட்டார்.
“பிரச்சனை அங்கு குறைவாக இருந்தால், நாங்கள் மீண்டும் எங்கள் இடத்திற்கு செல்ல விரும்புகிறோம்,” என்று அங்குள்ள ரோஹிங்கிய சமூகத் தலைவர் கூறுகிறார்.
நாளையப்பொழுது அவர்களுக்கு நல்ல பொழுதாக விடியுமா? நாளையத் தீர்ப்பு அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள உத்தரவிடும் தீர்ப்பாக வருமா?
மிச்சமிருக்கும் இன்றைய இரவிலாவது அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர்களின் நாடற்ற வாழ்வின் நிலைக்கு நல்ல தீர்ப்புதான் அவர்களுக்கு நல்ல தீர்வாகவும் இருக்கமுடியும்.