Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

காவிரி புஷ்கர விழாவில் ஆகம மீறலா?

September 10, 2017
in World
0
காவிரி புஷ்கர விழாவில் ஆகம மீறலா?

144 ஆண்டுகளுக்குபின் நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மஹாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சுவாமி ராமானந்தா தலைமையிலான புஷ்கரகமிட்டி செய்து வருகிறது விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், திருப்பனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாமுனிவர் இது குறித்து நம்மிடம் பேசினார்.

”நதிகளிலோ திருக்குளங்களிலோ இருப்பதைத் தான் தீர்த்தம் என்று நம் முன்னோர் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். வறண்டு கிடக்கும் நதிக்குள், போர்வெல் போட்டு அந்தத் தண்ணீரை தீர்த்தம் என்று சொல்வது மரபுக்கு எதிரானது. குடகுமலையில் உற்பத்தியாகி, பூம்புகார் கடலில் கலக்கும் வரை காவிரியில் நீர் நிறைந்திருந்து, அதில் புஷ்கரம் கொண்டாடினால் சரி. ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் துலாக்கட்ட காவிரியில் பூமிவழியாக கங்கை உள்பட புண்ணிய நதிகள் வந்து நீராடி தங்களது பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். தற்போது காவிரியில் நீரில்லை. காவிரியில் போர்வெல்போட்டு தண்ணீர் எடுத்து புஷ்கரம் கொண்டாட என்னத் தேவை வந்தது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் புஷ்கரம் கொண்டாடினார்கள். இவர்கள் 144 ஆண்டுகள் என குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேத, ஆகம விதிகளை பின்பற்றாமல் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சரியல்ல. எனக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்கள். மற்றபடி. ’என்னை கலந்துகொள்ள வாருங்கள்’ என்று அழைக்கவும் இல்லை, நான் வருவதாக ஒப்புக்கொள்ளவும் இல்லை. புஷ்கர விழாவில் உள்ள குளறுபடிகளை விளக்கி தகுந்த ஆதாரங்களுடன் வேத, ஞானம்மிகுந்த புலவர் மகாதேவன் அனைத்து ஆதீனங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். மகாதேவன் கருத்துகளில் நான் உடன்படுகிறேன்” என்கிறார் ஆதினகர்த்தர்.

புலவர் மகாதேவன் அனைத்து ஆதினங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

’சைவ, வைணவ, ஆகமம் அறிந்த சமயப் பெரியவர்கள் பலர் இருக்கையில், சுவாமி ராமாநந்தா தலைமையிலான புஷ்கர கமிட்டிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? புஷ்கரம் என்பது ஒரு வைணவத்தலம். இப்போது அந்த இடம் ராஜஸ்தானில் ஆஜ்மீருக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மா நடத்திய வேள்வியிலிருந்து ’சரஸ்வதி’, ’சுப்ரபா’ ஆகிய இரண்டு பெண் உருவ வடிவில் வெளிப்பட்டதுதான் புஷ்கரகங்கை. ’தேவலோகத்துக்கு உரிய இந்த புஷ்கரதீர்த்தம், பூலோகத்தில் ஐந்து நாட்களுக்கு இருக்கும் என்றும், அந்த நாட்களில் புனிதநீராடுவது புண்ணிய பலன்களை தரும்’ என்று சொல்கிறது பத்மபுராணம். புஷ்கர புராணத்தின் படி, ஒரு குறிப்பிட்ட நதியில் புஷ்கரகங்கை எழுந்தருளும் காலத்திற்குதான் ராசி நிர்ணயிக்கப்படுமே தவிர அந்த நதிக்கு அதுராசி என்று சொல்லப்படவில்லை. எனவே, 12 ராசிகளை, 12 நதிகளுக்கு உரித்தாக்குவது பொருத்தமற்றதாகும். காவிரியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது துலாம் ராசியில் குரு இருக்கும் காலத்தில் வருவது புஷ்கரம். அதை இதுவரைக் கொண்டாடியதே இல்லை. அப்படி நடந்திருந்தால் காவிரிபுராணத்திலோ, பிள்ளைவாள் அருளிய புராணத்திலோ, காவிரி மகாத்மியத்திலோ எழுதியிருப்பார்கள். ஆனால், இவர்கள் 144 ஆண்டுகளுக்குபின் கொண்டாடுகிறோம் என எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 7 ராசிகளில் பிறந்தவர்களுக்காக பரிகார விழாவாக்கி இந்த நிகழ்ச்சியை கடைசரக்காக்க முயற்சி செய்கிறார்கள். இதைவிட கொடுமை, 12 நாட்கள், அதற்கு 12 தேவதைகள், 12 விதமான தானங்கள் என பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். இது வேதனை தருகிறது. இப்படிச் செய்வது எல்லாமே ஆகம வேதங்களுக்கு முரணானது. அரசியல்வாதிகள் கொடியேற்றுவதைப் போல புஷ்கர விழாவுக்கு கொடியோற்றுவதும் பொருத்தமானது அல்ல…’

புலவர் மகாதேவன் எழுதியுள்ள இந்கக் கடிதம் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து புஷ்கர விழாக்கமிட்டி துணைத்தலைவரான ஜெகவீரபாண்டியனிடம் கேட்டோம், ”சுவாமி ராமாநந்தா தலைமையிலான புஷ்கரகமிட்டி அமைத்ததுமே நாங்கள் நான்குபேரும் காஞ்சி பெரியவரை சந்தித்து ஆலோசித்து ஆசீர்வாதம் பெற்றபின்னர் தான் புஷ்கரப் பணிகளை துவக்கினோம். தர்மபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம், அவர்களும் புஷ்கர விழாவிற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதியளித்தார்கள். திருப்பனந்தாள் ஆதீனத்தை இன்னொரு குழு சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தது. இவ்வளவு நடந்திருக்கும்போது, ஆதீனகர்த்தர்களை கலந்து ஆலோசிக்காமல் புஷ்கர கமிட்டி செயல்படுவதாக கூறுவது தவறு. கடந்தஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையில், ஆந்திர அரசு சார்பில் கிருஷ்ணா நதியில் மஹாபுஷ்கரம் கொண்டாடியபோது, ’144 ஆண்டுகளுக்குபின் கொண்டாடுவதாக’த் தான் குறிப்பிட்டுள்ளார்கள். அதனை பின்பற்றிதான் காவிரியிலும் கொண்டாடுகிறோம்.

மயிலாடுதுறை துலாக்கட்டம் மிகவும் புனிதமான இடம். தற்போது அங்கு 12 நதிகளுக்குரிய 12 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பழமை மாறாமல் புதுப்பித்துள்ளோம். காவிரியில் சிலநேரம் தண்ணீர் இருக்கும், சிலநேரம் வறண்டு இருக்கும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாகத்தான் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் போர்வெல் மூலம் நீர்நிரப்பி இருக்கிறோம். கழிவுநீரை வெளியேற்றவும், புதியநீர் நிரப்பவும் வசதி செய்திருக்கிறோம். அதேநேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி பிரதமர், கர்நாடக முதல்வர், தமிழக முதல்வர் மூவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். சிலர் புஷ்கர விழாவை தடைசெய்யக்கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ’புஷ்கரம் நடத்த தடையில்லை’ என்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. பிற விமர்சங்களுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிகரமாக புஷ்கரவிழா நடைபெறும்” என்றார் உறுதியாக.

Previous Post

புளோரிடாவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல்!

Next Post

கேளம்பாக்கம் முகாமிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கதி என்ன?

Next Post
கேளம்பாக்கம் முகாமிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கதி என்ன?

கேளம்பாக்கம் முகாமிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கதி என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures