கரீபியன் தீவு, கியூபாவை சூறையாடிய இர்மா சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 60 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர்.
அமெரிக்காவின் சுயாட்சி பெற்ற போர்ட்டோரிகா, அன்டிகுவா-பர்புடா நாட்டின் பர்புடா தீவுகள், பிரான்ஸுக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவு, பிரிட்டனுக்கு சொந்தமான பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளை இர்மா சூறாவளி 90 சதவீதம் அழித்துள்ளது. இந்த சூறாவளி நேற்று கியூபாவை தாக்கியது. அப்போது மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் சூறாவளி சுழன்றடித்தது.
அங்கிருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் நோக்கி இர்மா சூறாவளி நகர்ந்து வருகிறது. இந்த சூறாவளி ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா மாகாணத்தில் சுமார் 60 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர். மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் பேரழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இர்மா சூறாவளி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூத்த அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்புப் பணியில் ராணுவத்தை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
புளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் கூறியபோது, ‘சூறாவளி கடந்து செல்லும் பகுதிகளை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையெனில் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார்.
இந்தியத் தூதரகம் உதவி
இர்மா புயல் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியபோது, ‘அமெரிக்காவில் செயல்படும் இந்திய தூதரகங்கள் புளோரிடாவில் வாழும் இந்தியர்களுக்கு உரிய உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது’ என்றார்.