அமெரிக்காவை மிரட்டும் இர்மா புயல் காரணமாக 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலில் உருவான ‘ஹார்வி’ புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்பு அடங்காத நிலையில், அட்லாண்டிக் கடலில் மேலும் ஒரு புயல் உருவானது. அதற்கு இர்மா என பெயர் சூட்டியுள்ளனர். இது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது.முன்னதாக அது அமெரிக்காவின் அண்டையிலுள்ள கரீபியன் கடல் தீவுகளை கடுமையாக தாக்கி பெரும் சேதங்களை உருவாக்கியிருந்தது. தற்போது புளோரிடாவுக்குள் இர்மா தாக்கம் இருப்பதால், அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது.புளோரிடா மாகாணத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மியாமி கடற்கரை மற்றும் கீ பிஸ்கயின் பகுதிகளிலும் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.புளோரிடாவில் மையம் கொண்டிருக்கும் இர்வின் புயல் படிப்படியாக நகர்ந்து அடுத்த வாரம், ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அலபாமா, வடக்கு கரோலினா மாகாணங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புயல் வருகிற வெள்ளிக்கிழமை மத்திய பகாமாஸ் மற்றும் கியூபாவின் வடக்கு கடற்கரை பகுதியில் மணிக்கு 155 கி.மீட்டர் வேகத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.