‘விவேகம்’ படத்தின் அஜித்துக்கு ஏற்பட்ட தோள்பட்டை அடிக்கு, சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடைபெற்றது.
இதன் சண்டைக்காட்சிகளுக்காக கடுமையாக முயற்சி செய்து நடித்துக் கொடுத்தார். எந்தவொரு சண்டைக்குமே டூப்பின்றி நடித்து முடித்துக் கொடுத்தார். அஜித்தின் முயற்சி அனைத்தையுமே படத்தின் முடிவில் வீடியோ காட்சிகளை இணைத்தது படக்குழு.
‘விவேகம்’ சண்டைக்காட்சியின் போது தோள்பட்டை ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைப் பொருட்படுத்தாது அஜித் நடித்து முடித்துக் கொடுத்தார். தொடர்ச்சியாக தோள்பட்டை வலி இருந்து வந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி சுமார் 2 மணி நேரம் சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ள அஜித்தை முழுமையாக ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதற்கு முன்பாக கார் பந்தயத்தில் ஏற்பட்ட காயம், ‘ஆரம்பம்’ படத்தின் சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட காயம் உள்ளிட்டவற்றுக்கு அஜித் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் முழுமையாக குணமடைந்தவுடன் மட்டுமே, அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.