‘‘சச்சின் தந்த அறிவுரைப்படி தற்போது செயல்படுகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என நம்புகிறேன்,’’ என, இந்திய வீரர் ரெய்னா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரெய்னா, 30. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’யில் (பெங்களூரு, பிப்., 2017) விளையாடினார். ‘மிடில்–ஆர்டரில்’ மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் வந்து விட்டதால், இவரின் இடம் கேள்விக்குறியாகி விட்டது.
இது குறித்து ரெய்னா கூறியது: நான் எப்போதும் கடின உழைப்பை நம்புவேன். தற்போது, அணியில் மீண்டும் பிடிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 60 சதவீத உழைப்பு, 40 சதவீத அதிர்ஷ்டம் நிச்சயமாக வேண்டும். சமீபத்தில், மனது மிகவும் குழப்பத்தில் இருந்தது. உடனடியாக, ‘மும்பைக்கு வந்தால் உங்களை சந்திக்கலாமா, என சச்சினிடம் கேட்டேன். ‘பிசியான’ நேரத்திலும் சம்மதம் தெரிவித்தார். தினமும் 3 மணி நேரம் இவருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டேன். முடிவில், எனது பயிற்சி குறித்து திருப்தி தெரிவித்தார்.
நம்பிக்கை:
தவிர, ‘ கிரிக்கெட்டில் அதிக இலக்கை எட்டிவிட்டாய். உனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி, போட்டியில் உற்சாகத்துடன் விளையாடு,’ என, அறிவுறுத்தினார். இதைத்தான் நான் பின்பற்றுகிறேன். எனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போட்டியில் பங்கேற்பதை காட்டிலும், சமூகவலைதளத்தில் ‘பிசியாக’ இருப்பதாக குறை கூறுகின்றனர். வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் என்ன தவறு உள்ளது. அனைவரையும் நம்மால் மகிழ்ச்சிபடுத்த முடியாது. தற்போது, இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ‘செல்பி’ புகைப்படத்தை பதிவேற்றம் செய்கின்றனர். நான் மட்டும் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் எதற்காக குறை சொல்கின்றனர். இவ்வாறு ரெய்னா கூறினார்.

