அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சகநாட்டைச் சேர்ந்த 83-ம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டில் வீனஸ் பதிலடி கொடுக்க இந்த செட்டை 0-6 என ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இழந்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பானது. 73 நிமிடங்கள் நீடித்த இந்த செட்டை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5 என தனதாக்கினார்.
2 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர், இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2013-ம் ஆண்டு விம்பிள்டனில் கால் இறுதி சுற்றுவரையே முன்னேறியிருந்தார். மேலும் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 11 மாதங்கள் டென்னிஸ் விளையாடாமல் இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம்தான் மீண்டும் களத்துக்கு திரும்பியிருந்தார்.
அப்போது அவர் தரவரிசையில் 957-வது இடத்திலேயே இருந்தார். இதன் பின்னர் அவர் பங்கேற்ற 16 ஆட்டங்களில் 14 வெற்றிகளை குவித்தார்.டெரான்டோ மற்றும் சின்சினாட்டி தொடர்களில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டார்.
இந்நிலையில்தான் 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்த 37 வயதான வீனஸை வீழ்த்தி அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்குள் கால் பதித்துள்ளார். ஸ்லோன் ஸ்டீபன்ஸிடம் தோல்வியடைந்ததன் மூலம் அமெரிக்க ஓபனில் 3-வது முறையாக பட்டம் வெல்லும் வீனஸ் வில்லியம்ஸின் கனவு கலைந்துள்ளது. வெற்றி குறித்து ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கூறும்போது, “இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த மைதானத்தில் நான் பட்டம் வென்றால் அது அதிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இது ஒவ்வொரு வீராங்கனையின் கனவாக இருக்கும் என்றே கருதுகிறேன்” என்றார்.
மேடிசன் கீஸ்
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், தனது சகநாட்டு வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளவருமான, 22 வயதான மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். அவர், தனது அரை இறுதியில் சகநாட்டைச் சேர்ந்த 20-ம் நிலை வீராங்கனையான கோகொ வான்டேவேஹ்கை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 66 நிமிடங்களில் ஒருதரப்புக்கு சாதகமாக முடிவடைந்தது போல் அமைந்தது. மேடிசனும், கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவர், அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார்.
இறுதிப் போட்டியில் மோதவுள்ள ஸ்லோன் ஸ்டீபன்ஸூம், மேடிசன் கீஸூம் இதற்கு முன்னர் ஒரே ஒரு ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். 2015-ம் ஆண்டு நடைபெற்ற மியாமி தொடரில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் மேடிசன் கீஸை வீழ்த்தி உள்ளார். மேலும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இதுவரை நான்கு டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ளார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற வாஷிங்டன், ஆக்லாந்து, சார்லஸ்டன், அகாபுல்கோ ஆகிய தொடர்களில் அவர், கோப்பையை வென்றுள்ளார். அதேவேளையில் மேடிசன், 3 டபிள்யூடிஏ பட்டங்களைகைப்பற்றி உள்ளார். 1981-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் இருவர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்

