இந்தியாவின் சானியா மிர்சா 2017 சீசன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் முதல் அரையிறுதியில் நுழைந்தார். தன் சீனக் கூட்டாளி ஷுவாய் பெங்குடன் இணைந்து ஹங்கேரி-செக்.குடியரசு ஜோடியான டிமியா பேபோஸ், ஆந்த்ரியா லவச்கோவா ஆகியோரை 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்கள்.
4-ம் தரவரிசையில் உள்ள சானியா-பெங் ஜோடி ஒரு மணி 56 நிமிடங்களில் எதிர் ஜோடியைத் தோற்கடித்தனர்.
இதற்கு முன்னால் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம்களில் 3-வது சுற்றில் ஆடி வெளியேறியுள்ளது சானியா ஜோடி. பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார், இந்நிலையில் அரைஇறுதியில் நுழைந்துள்ளனர்
சானியா-பெங் ஜோடி தற்போது இரண்டாம் தரவரிசையில் உள்ள மார்டினா ஹிங்கிஸ், யங்-ஜன் சான் ஜோடியை அரையிறுதியில் சந்திக்கின்றனர்.
பல்வேறு கூட்டாளிகளுடன் ஆடி வரும் சானியா மிர்சா இந்த ஆண்டில் வென்ற ஒரே சாம்பியன் பட்டம் பிரிஸ்பன் டென்னிஸ் தொடர்தான்., சிட்னியில் ஸ்ட்ரைகோவாவுடன் ஜோடி சேர்ந்து இறுதி வரை முன்னேறினார்.
2016 சீசனில் 8 சாம்பியன் பட்டங்களை சானியா ஜோடி வென்றது, இதில் மார்டினா ஹிங்கிஸுடன் 5 சாம்பியன் பட்டங்களை வென்றார்.
2016-ம் ஆண்டில் மகளிர் இரட்டையரில் நம்பர் 1-ஆக இருந்த சானியா மிர்சா தற்போது 9-ம் நிலைக்கு இறங்கியுள்ளார். ஹிங்கிஸுக்குப் பிறகே சரியான கூட்டாளி அமையவில்லை, தற்போது சீனாவின் பெங் இவருக்கு தோதாக ஆடுவாரா, இல்லை அவருக்குத் தோதாக இவரால் ஆட முடிகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.