Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

1 டெஸ்ட், 2 சதம், 17 ஆண்டு கனவு… கரீபிய மண்ணில் கரைபுரளும் உற்சாகம்! யார் அந்த ஷெய் ஹோப்?

August 31, 2017
in Sports
0

வெற்றிக்குத் தேவை வெறும் இரண்டு ரன்கள். கைவசம் இருப்பது 5 விக்கெட்டுகள். 4 ஓவர்களில் மேட்ச் முடிந்து விடும். கிறிஸ் வோக்ஸ் வீசிய 92-வது ஓவரின் 2 வது பந்து. அவ்வளவு பதற்றத்திலும் இயல்பாக ஒரு ஃபிளிக். ஸ்கொயர்லெக் திசையில் உருண்ட பந்து பவுண்டரி லைனைத் தொடுகிறது. என்ன… ‛ஒரு நாயகன் உதயமாகிறான்’ என்று பி.ஜி.எம் மட்டும்தான் ஒலிக்கவில்லை. அவ்வளவுதான்… இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த வேண்டுமென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் 17 வருட கனவு நிறைவேறிய தருணம் அது. ஹெட்டிங்லே மைதானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அந்த வெற்றியை ரசித்தது. அதில் இங்கிலாந்து ரசிகர்களும் அடக்கம்.

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. வெற்றி, தோல்வி இரண்டிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், தனி நபர் ஒருவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார். இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் இளம்புயல் ஒருவர் மாற்றியதைப் போல… மாற்றியது மட்டுமல்லாது, வரலாறும் படைத்து விட்டார். வரலாறு மட்டுமல்ல, இங்கிலாந்து வீரர்களின் மெதப்புக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார். முற்றுப்புள்ளி மட்டுமல்ல, கரீபிய மண்ணில் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார். 3 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் பார்படோஸ் தீவு மட்டுமல்ல ஒட்டுமொத்த கரீபிய மண் முழுவதும் தன் பெயரை உச்சரிக்க வைத்து விட்டார். கரீபிய தீவுகள் மட்டுமல்ல, இங்கிலாந்து மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, கிரிக்கெட் கோலோச்சும் எல்லா தேசங்களிலும் இன்று அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவர் பெயர் ஷெய் ஹோப்.

ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் விளாசி,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை பரிசளித்ததுடன், யார் சாமி இவன் என கிரிக்கெட் உலகையே தன்னைப் பற்றி பேசவைத்தது தான் இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் தலைசிறந்த சாதனை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த மேட்ச் வின்னிங் அதிர்ஷ்டம் இப்போது ஷெய் ஹோப் கைகளில்..

யார் இந்த ஹோப்?

ஷெய் டீகோ ஹோப், வெஸ்ட் இண்டீஸின் பார்படோஸ் தீவில் 1993-ம் ஆண்டு பிறந்தவர். விவியன் ரிச்சர்ட்ஸ், கர்ட்லி அம்புரோஸ், பிரையன் லாரா என லெஜண்டுகள் பிறந்த மண்ணில் பிறந்த வலது கை பேட்ஸ்மேனான ஹோப், கிரிக்கெட்டையே வாழ்க்கையாக்கியதில் அதிசயமில்லைதான். ஷெய் ஹோப் தற்போது அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஆல்ரவுண்டரான கைல் ஹோப்பின் சகோதரர். 2014-ம் ஆண்டில் விண்ட்வர்ட்ஸ் ஐலேண்ட்ஸ் அணிக்கு எதிராக கென்சிங்டன் மைதானத்தில் ஹோப் அடித்த இரட்டைசதம் தான், 21 வயதில் தேசிய அணியில் இடம் கிடைக்க பேஸ்மென்ட் அமைத்தது. அந்தத் தொடரில் இரட்டை சதமடித்தது ஹோப் மட்டுமே. இந்த வெறித்தனமான பெர்ஃபாமென்ஸ் மூலம் 2015-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். தொடக்கம் எல்லோருக்கும் சிறப்பாக அமைந்துவிடுமா என்ன?

ஆட்டநாயகன் விருது பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை, 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹோப், பெரிதாக மாயாஜாலம் எதுவும் நிகழ்த்தவில்லை. மொத்தம் 391 ரன்கள். அதில் ஒரே ஒரு அரைசதம். அவ்வளவே. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 18 போட்டிகளில், 3 அரைசதம் , ஜிம்பாவே அணிக்கெதிராக ஒரு சதம் என ஆரோக்கியமான கிரிக்கெட்டையே வெளிப்படுத்தி இருந்தார். அதேநேரத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் கில்லி இந்த ஹோப்.

2017-ம் சீசனுக்கான ரீஜினல் சூப்பர் 50 என்ற தொடரில் பார்படோஸ் அணிக்காக களமிறங்கிய ஹோப், அரையிறுதி, ஃபைனல் என இரண்டு போட்டிகளிலும் சதமடித்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஃபைனலில் ஜமைக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹோப் அடித்த சதம் வெற்றிக்கோப்பையை பார்படோஸ் அணியின் மடியில் விழவைத்தது. பார்படோஸ் அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பரிசளித்து, மாஸ் காட்டிய ஹோப், தேசிய அணிக்காக ஜொலிக்க தனக்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தார்.

ஆகஸ்ட் 29,2017. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானம். 322 ரன்கள் எடுத்தால் வெற்றி. 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் என்ற நிலை. சக வீரரும் ஷெய் ஹோப்பின் சகோதரருமான கைல் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலே ரன் அவுட்டாகி வெளியேற, தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் நல்ல துணைக்கு எதிர்நோக்கி இருக்கிறார். களமிறங்கினார் ஷெய் ஹோப். பிராத்வெயிட் – ஹோப் பார்ட்னர்ஷிப் வேர்பிடிக்க, இங்கிலாந்தின் வெற்றி நம்பிக்கையில் விழுந்தது விரிசல்.

ஹோப் ஒன்றும் வித்தியாசமான ஆட்டக்காரர் இல்லை பொதுவாக விண்டீஸ் பேட்டிங்கில் இருக்கும் ஆக்ரோசமான ஷாட்டுகள் இல்லை. நேர்த்தியான ட்ரைவ்கள் இல்லை. ஆனால் அவர் பவுண்டரிக்கு அனுப்பிய பந்துகளுக்கு தெரியும் வேகத்தை விட விவேகம் முக்கியமென்று; ஆக்ரோஷத்தை விட நிதானம் முக்கியம் என்று. பந்தைத் தூக்கியடிக்காமலே ஒரு பேட்ஸ்மேன் அனுபவ இங்கிலாந்து பவுலர்களைக் கதற விட்டார் என்றால், அது ஹோப் மட்டுமே. மறுபுறம் சதத்தை பிராத்வெயிட் தவறவிட்டாலும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் தன் 2-வது சதத்தை ஹோப் எட்ட, லீட்ஸில் ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் வீரர் என்று வர்ணனையாளர்கள் கர்ஜித்தனர்.

தன் 12-வது டெஸ்ட் போட்டியில் முதல் சதமடிப்பது சாதனை என்று சொல்ல முடியாது. ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடிப்பது நல்ல சாதனைதான். அனுபவ இங்கிலாந்து பவுலிங் கூட்டணியை சமாளித்து, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 17 ஆண்டுகள் கழித்து வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று சாதனைபடைத்த போட்டியில், இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் விளாசி, ஆட்ட நாயகன் விருதை வெல்வது எவ்வளவு பெரிய சாதனை! அந்தச் சாதனையை ‛ஜஸ்ட் லைக் தட்’ என நிறைவேற்றி அணியில் நிரந்தர இடத்துக்கு அச்சாரமிட்டு விட்டார்.

வாழ்த்துகள் ஹோப்!

Previous Post

3 ரன்களுக்கு 5 விக்கெட்: பாக்.வீரர் சோஹைல் தன்வீர் டி20 புதிய சாதனை

Next Post

பாலிவுட்டில் ஓங்கி அடிக்கப்போகும் சன்னி தியோல்!

Next Post

பாலிவுட்டில் ஓங்கி அடிக்கப்போகும் சன்னி தியோல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures