இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வரும் 2019 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற முடியுமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், 30. இதுவரை 52 டெஸ்ட் (292 விக்.,), 111 ஒருநாள் (150 விக்.,) மற்றும் 46 ‘டுவென்டி–20’ (52 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் அரங்கில் கும்ளேவுக்கு மாற்றாக வந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் தோனியால் கண்டுபிடிக்கப்பட்டவர் என கூறுவது உண்டு. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ‘மேட்ச் வின்னராக’ ஜொலித்தவர். தவிர, பேட்டிங்கிலும் கலக்குவார்.
திடீர் மாற்றம்:
இருப்பினும், திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை, சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகள் தான் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அஷ்வின் மீது பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், 3 போட்டிகளில் களமிறங்கிய இவரால், 1 விக்கெட் தான் வீழ்த்த முடிந்தது. தவிர, கடைசி 10 போட்டியில் இவர் வீசிய 85 ஓவர்களில் 60 ரன் (0 விக்.,), 63 (0), 65 (3), 60 (0), 43 (1), 54 (0), 70 (0), 47 (1), 28 (3) என, ரன்களையும் வாரி வழங்கினார்.
இளமை வரவு:
இதனிடையே, தற்போது நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு தரப்பட்டது. தவிர, சமீபத்திய போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சகால், 27, அக்சர் படேல், 23, குல்தீப் யாதவ், 22, மற்றும் கேதர் ஜாதவ், 32, என, பலரும் சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அஷ்வினுடன் ஒப்பிடும் போது, மற்றவர்களுக்கு பேட்டிங் திறமை குறைவு தான். இருப்பினும், கேதர் ஜாதவ் அஷ்வினுக்கு போட்டியாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனால், வரும் 2019 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என, பல்வேறு செய்திகள் வெ ளியாகின்றன.
எது ஓய்வு:
இதுகுறித்து இந்திய அணியின் ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் கூறியது:
இலங்கை தொடரில் அஷ்வினுக்கு ஓய்வு தரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இவர் இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இதனால், இது எந்த மாதிரியான ஓய்வு என்று சரியாகத் தெரியவில்லை. இதனால், இவருக்கு ஓய்வு தரப்பட்டதா அல்லது அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என, குழப்பமாக உள்ளது. தற்போதைய நிலையில், குல்தீப் யாதவ் தனக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி, தன்னை நிரூபித்து வருவது பாராட்டத்தக்கது. மற்ற ‘சுழல்’ வீரர்களில் இருந்து இவர் முற்றிலும் வேறு படுகிறார். இந்திய ஒருநாள் அணியில் குல்தீப் யாதவ் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
அஷ்வின் குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘ இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் செயல்பாடு சரி தான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேநேரம், குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறும் நாள் வெகுதுாரம் இல்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கவுள்ள நிலையில், இவரது தேர்வு குறித்து பரிசீலிக்கலாம்,’’ என்றார்.