‘‘டெஸ்ட் தொடரைப் போல, ஒருநாள் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் தொடரும் என நம்புகிறேன்,’’ என, முகமது ஷமி தெரிவித்தார்.
இலங்கை சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 3–0 என, முழுமையாக வென்றது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. மூன்று டெஸ்டில், 10 விக்கெட் வீழ்த்தினார்.
தொடரின் வெற்றி குறித்து முகமது ஷமி கூறியது: இலங்கைக்கு எதிராக பெற்ற வெற்றி சிறப்பானது. தவிர, ஒட்டுமொத்தமாக வெல்வது மிகவும் அபூர்வமானது. வீரர்கள் அனைவரும், ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி இது.
அணியிலுள்ள வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல உணர்கிறோம். ஒவ்வொருவரின் வெற்றியை மற்றவர்கள் கொண்டாடுகிறோம். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. இதனால், வீரர்களின் பலம் குறித்து அனைவருக்கும் தெரியும்.
இந்த வெற்றியை வரும் போட்டிகளிலும், இந்திய அணி தொடர வேண்டும் என, விரும்புகிறோம். இப்போதுள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட சக பணியாளர்கள் குழு, மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது பலத்துக்கு ஏற்ப, போட்டிகளில் 100 சதவீத திறமை வெ ளிப்படுத்த முயற்சி செய்தேன். பந்துகளை ‘சுவிங்’ செய்வது, ‘ரிவர்ஸ் சுவிங்’ செய்வதில் அதிக கவனம் செலுத்தினேன். இப்போது குடும்பத்தினருடன் நேரம் செலவிடப் போகிறேன். சிறிய ஓய்வுக்குப் பின், மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை துவங்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு முகமது ஷமி கூறினார்.