இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எப்போதுமே ஓர் ஆணாதிக்க அமைப்புதான் என்று முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டயானா எடுல்ஜி சாடியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவின் ஒருவராகியா டயானா எடுல்ஜி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றி கூறும்போது, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி சிறப்பாக ஆடியது கூட பிச்சிஐ-யில் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்றார்.
“நான் எப்போதுமே பிசிசிஐ-க்கு எதிராக உரத்த குரலில் பேசி வந்துள்ளேன். 2006-ல் மகளிர் கிரிக்கெட் பிசிசிஐ நிர்வாகத்திற்குள் வந்ததிலிருந்தே நான் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறேன். பிசிசிஐ மிகவும் ஆணாதிக்கம் நிரம்பிய ஓர் அமைப்பாகும். பெண்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள், கிரிக்கெட்டுக்குள் வருவது அவர்களுக்கு பிடித்தமானதல்ல.
நான் விளையாடிய காலங்களிலிருந்தே நான் பிசிசிஐ-யின் இத்தகைய ஆணாதிக்கப் போக்கை உரத்த குரலில் எதிர்த்து வந்துள்ளேன். மகளிர் கிரிக்கெட் நன்றாக ஆடுவது இப்போதும் கூட பிசிசிஐ-க்கு பிடித்தமானதாக இல்லை. இந்த மகளிர் அணி சிறப்பாக ஆடுகிறது என்பதை அவர்களால் இன்னும் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
2011-ல் ஸ்ரீநிவாசன் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற போது, நான் அவரை வாழ்த்துவதற்காக வான்கடே ஸ்டேடியத்துக்குச் சென்றேன். அப்போது அவர், “மகளிர் கிரிக்கெட் என்ற ஒன்று நிகழ நான் அனுமதித்திருக்க மாட்டேன்” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் 171 ரன்களை விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் கூறும்போது, “நான் சிறுவயதாக இருந்த போது மற்ற சிறுமிகளை விளையாட அழைக்க சிரமப்பட்டிருக்கிறேன். யாரும் வரமாட்டார்கள், நான் மற்ற விளையாட்டில் நன்றாக விளையாடுபவர்களை நான் கிரிக்கெட்டுக்காகத் தேற்றித்தான் சிறுவயதில் ஆடிவந்தேன், ஒரு அகாடமி கூட கிடையாது. என் பயிற்சியாளர் எனக்காக ஒரு அகாடமி தொடங்கினார். ஆனால் இப்போது மகளிர் கிரிக்கெட்டுக்கென 3 அகாடமிகள் உள்ளன” என்றார்.
