’எல்லையில் நிலவும் பதற்றங்களைக் குறைக்க, இந்தியா- பாகிஸ்தான் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய ராணுவமும் பதில் தாக்குதல்கள் நடத்திவருகிறது. இதேபோல, ஊடுருவல்களும் அதற்கு எதிரான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனால் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்தே காணப்படுகிறது.
‘இந்த பதற்ற நிலையைக் குறைத்து எல்லையில் அமைதி நிலவ, இரு நாடுகளும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் மாகாணச் செய்தித்தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் கூறுகையில், ‘இரு நாடுகளிலும் அமைதி நிலவவே அமெரிக்கா விரும்புகிறது. அதனாலேயே, இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஊக்குவிக்கிறோம்’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டு நாள்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘”தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள்குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆஃப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்துவருவதால், அந்நாடு பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரும்’ என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
