இங்கிலாந்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் லைலா ரோஸ் (வயது 46). மொராக்கோ தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவரான இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஸ்னூக்கர் விளையாட்டு வீரரான ரோனி ஓ சுல்லிவனை மணந்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். கடந்த 1990-களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலும் அவர் முகம் காட்டியுள்ளார்.
நடிகை லைலா ரோஸ் விடுமுறையை கழிப்பதற்காக தனது 10 வயது மகள் இனேஸ் கானுடன் ஸ்பெயின் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அங்குள்ள பார்சிலோனா நகருக்கு அருகே உள்ள லாஸ் ராம்ப்லாஸ் பகுதியை சுற்றி பார்த்த போதுதான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அந்த தாக்குதல் அரங்கேறியது.
அதிர்ஷ்டவசமாக தப்பினர்
பட்டப்பகலில் வேன் ஒன்றை வேகமாக ஓட்டி வந்த பயங்கரவாதி ஒருவர் மக்கள் கூட்டத்தில் மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகில் உள்ள கட்டிடங்களில் சென்று ஒளிந்து கொண்டனர்.
அதைப்போல லைலாவும், தனது மகளுடன் அருகில் இருந்த உணவு விடுதி ஒன்றுக்குள் நுழைந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த குளிரூட்டும் கருவிக்குள் இருவரும் ஒளிந்து கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ஊழியர்களுக்கு நன்றி
பயங்கரமான அந்த நிகழ்வுக்கு இடையேயும், அந்த அனுபவத்தை மிகுந்த சிலிர்ப்புடன் தனது டுவிட்டர் தளத்தில் லைலா பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘தாக்குதலுக்கு மத்தியில் உணவு விடுதி ஒன்றின் குளிரூட்டும் கருவிக்குள் ஒளிந்து இருக்கிறேன். எல்லாம் வேகமாக நடந்து விட்டது. அனைவரின் பாதுகாப்புக்காக வேண்டுகிறேன். துப்பாக்கி சத்தம் கேட்கிறது. யாரையோ தேடி ஆயுதம் தாங்கிய போலீசார் ஓடுகின்றனர்’ என்று தெரிவித்து இருந்தார்.
தனக்கும், தனது மகளுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததற்காக உணவு விடுதி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள லைலா, பார்சிலோனாவை நேசிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் தாக்குதல் தொடர்பான படங்களையும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

