பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீதான பனாமா கேட் ஊழல் வழக்கை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அவரை தகுதி இழப்பு செய்து உத்தரவிட்டது.
கடந்த மாதம் 28–ந் தேதி பிறப்பித்த இந்த உத்தரவில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும். இவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, 6 மாதங்களில் முடிய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பல்வேறு ஊழல் வழக்குகளில் முதல் வழக்காக அல் அஜிஜியா உருக்கு ஆலை வழக்கை தேசிய பொறுப்புடைமை அமைப்பு கையில் எடுத்துள்ளது.இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகியோரும் லாகூரில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்பு சம்மன் பிறப்பித்தது. ஆனால், இந்த சம்மனை ஏற்று நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் என யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

