சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ‘தி கிரேட் பாதர்’ படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் தங்களது புதிய படத்தை ஆரம்பித்துள்ளது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர்கள் கூட்டணியில் இருந்து பிருத்விராஜ் விலகிய நிலையில், இப்போது இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெயர் ’18-ஆம் படி’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ரஞ்சித் வெளியிட இருக்கிறார்.
இந்தப்படத்திற்கான புதுமுக நடிகர்கள் தேவை என்கிற அறிவிப்பை நடிகர் நிவின்பாலி தனது பேஸ்புக் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் “இன்று நல்ல துவக்கம் தரும் நாளாக அமைந்துள்ளது. குறிப்பாக நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த நாள் இனிய நாள். ’18-ஆம் படி’ படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்காக ’18-22 வரையிலான ஆண்களும் பெண்களும் வரவேற்கப்படுகிறார்கள்” என கூறியுள்ள நிவின்பாலி, இந்த தகவலை மற்றவர்களும் அறிந்துகொள்ளும் விதமாக ஷேர் பண்ணுமாறும் கூறியுள்ளார்.

