இந்த மாதத்தில் கோவையின் நீர்நிலைகள், மற்றும் தோட்டங்காடுகளில் கடந்த சில வாரங்களாக சிகப்பு முனியாக்கள் எனப்படும் ரெட் அவாடவட்ஸ் குருவிகள்( Red Avadavats) வந்த வண்ணம் உள்ளன. அதை இயற்கையை நேசிக்கும் பறவைக் காதலர்கள் படம் பிடித்த வண்ணம் உள்ளனர்.
சிவப்பு முனியா அல்லது ஸ்ட்ராபெரி ஃபின்ச் (strawberry finch) ஒரு தேன்சிட்டு அளவிலான பறவை. வெறும் 10 செ.மீ. அளவே உள்ளது. தேன்சிட்டு என்பது பூக்களில் உள்ள தேனை தேடித்தேடி உறிஞ்சிக் குடிப்பவை. ஆனால் இவை சிட்டுக்குருவியைப் போல் விதைகளை, நெல் மணிகளை பொறுக்கி உண்பவை.
வெப்ப மண்டல ஆசியாவின் வெட்ட வெளிகளிலும், புல்வெளிகளிலும் இது காணப்படுகிறது. இவை ஜோடி, ஜோடியாக லவ் பேர்ட்ஸ் போலவே காணப்படும். ஆனால் அவையல்ல. முனியா வகையை சார்ந்தவை. முனியாவிலும் ஒயிட் ரம்பட் முனியா, பிளாக் த்ரோட்டட் முனியா, கேலி பிரஸ்ட்டட் முனியா, பிளாக் ஹெட்டட் முனியா என நிறைய வகை உள்ளன. இந்த வகை முனியாக்களில் எல்லாம் அழகானவை இந்த சிகப்பு முனியாக்கள்தான் என்கிறார் சமீபத்தில் இதை படம் பிடித்த பறவைக் காதலர் வடவள்ளி சுப்பிரமணியன்.
”வட்டமான கருப்பு வால் மற்றும் பருவகால சிவப்பு நிற மினுக்கத்தால் இந்த சிறிய பிஞ்சுப் பறவையை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்தியாவில் குஜராத், அகமதபாத் பகுதிகளில் அதிகமாக காணப்படும் இந்தப் பறவையை ஏழெட்டு வருஷமாகவே நம் கோவை பகுதி நீர்நிலைகளின் அருகே உள்ள தோட்டம், காடுகளில் கவனித்து வருகிறேன். அதற்கு முன்பு கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிகள், ஊட்டி, கோத்தகிரி மலைப்பகுதிகளில் கண்டுள்ளேன்.
கோவையைப் பொறுத்தவரை அபூர்வத்திலும் அபூர்வமாக ஒன்றிரண்டு ஜோடிகளாகவே குறிப்பிட்ட சில இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த வாரம்தான் சூலூர் குளத்தருகே உள்ள ஒரு வெண்டைக்காய் விளைச்சல் உள்ள தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட குருவிகளைக் கண்டேன். அதில் ஜோடிகளை விட ஒரே சமயத்தில் ஒரே கிளையில் வரிசையாக பதினொரு பறவைகள் படமாக கிடைத்தது அபூர்வத்திலும் அபூர்வம். கோவை பகுதிகளில் இந்த மழை சீசனில் மட்டுமே இந்த பறவைகளை காணமுடிகிறது!” என்றார் அவர்.
இந்தப் பறவைகளைப் பார்த்தவர்கள் படம் பிடித்து அதைப் பாதுகாத்தால் பரவாயில்லை. பிடித்து விற்பனைக்கும் கொண்டு போய் விடுகின்றனர். அதனால் இதை காண்பதும் அரிதாகவே உள்ளது என்கிறார் சுப்பிரமணியன்.

