Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Uncategorized

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன..?

August 3, 2017
in Uncategorized
0
சனிப்பெயர்ச்சி என்றால் என்ன..?

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி அட்டவணைப்படி பெயர்ச்சி நிகழ்ந்து வருகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். தற்போது கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது.
சனி சஞ்சாரம்
ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும்.
அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.
அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.
4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.
2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
3ல் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.
4ல் இருந்தால் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.
7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.
10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.
11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.
12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.
ஏழரை நாட்டு சனி என்றால் என்ன?
ஏழரைச் சனி: பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்
முதல் சுற்று – மங்கு சனி :
இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.
இரண்டாம் சுற்று – பொங்கு சனி :
வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்
மூன்றாம் சுற்று – தங்கு சனி :
பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.
நான்காம் சுற்று – மரணச் சனி :
நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்
பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
சனிபகவானின் பிரசித்திபெற்ற ஆலயங்கள் :
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் ‘வட திருநள்ளாறு’ என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயம்.
சனிபகவான் குறித்த சில தகவல்கள் :
சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். “உன் பக்தர்களை அண்டமாட்டேன்” என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.
கைரேகையில் சனிபகவான்:
சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.
ஜாதகத்தில் சனீஸ்வரர் பலம் பொருந்தியிருந்தால் என்ன பலன்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் பலம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.
சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.
சனி பகவான் கிரகஸ்துதி
நீலாஞ்சன ஸமா பாஸம்ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்தம் நமாமி ஸனைச்சரம்
சனி காயத்ரி
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

Previous Post

மதுபழக்கத்தை மறக்க கொய்யா சாப்பிடுங்க!

Next Post

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

Next Post
இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures