அரசு வேலைக்காக 9 வருடங்கள் காத்திருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா பூனியா, ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் விரைவில் பணி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 13 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி கோப்பையை வென்றதில் கோல்கீப்பர் சவிதா பூனியாவின் பங்கு அளப்பரியது.
வெற்றியை தீர்மானிக்கும் வகையில் அமைந்த பரபரப்பான ஷூட் அவுட்டில் சவிதா அற்புதமாக செயல்பட்டதாலேயே இந்திய அணி கோப்பையை வெல்ல முடிந்தது. மேலும் இந்த வெற்றியால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
27 வயதான சவிதா பூனியா, ஹரியாணா மாநிலம் ஜோத்கான் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 9 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அவருக்கு இதுவரை, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆசிய கோப்பையை வென்ற நிலையில் தனக்கு அரசு பணி கிடைக்கும் என சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஆசிய கோப்பை வென்றதில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 9 வருடங்களாக நான் வேலைக்காக முயற்சி செய்து வருகிறேன்.
‘பதக்கம் வெல்பவர்களுக்கு அரசு வேலை’ என்ற ஹரியாணா அரசு திட்டத்தின் கீழ் எனக்கு வாக்குறுதி மட்டுமே அளிக்கப்பட்டது. எனக்கு 27 வயதாகிறது. இதுவரையிலும் நான் எனது தந்தையின் வருமானத்தை சார்ந்தே வாழ்கிறேன்.
நாட்டுக்காக கடந்த 9 வருடங்களாக விளையாடி வருகிறேன். ஒவ்வொரு முறையும் அணி வெற்றி பெறும் போது, அரசு வேலை கிடைக்கும் என நம்பிக்கை கொள்வேன். ஆனால் எதுவும் மாறவில்லை.
இந்த வயதில் பெற்றோரை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் எனது விஷயத்தில் இது எதிராக உள்ளது. எனது தந்தை ஒரு மருந்தாளுனர். ஒருவரின் வருமானத்தை மட்டும் கொண்டு குடும்பத்தை வழிநடத்துவது எளிதான விஷயம் கிடையாது.
நம்பிக்கை
சில நேரங்களில் எனது பெற்றோரை காணும் போது பதற்றம் அடைவேன். எனக்கு வேலை இல்லை என்பதை நினைத்து எனது அம்மா அதிகம் கவலை கொள்வார். ஆனால் எனது அப்பா எனக்கு ஊக்கம் அளிப்பார். வேலையின்மை என்ற காரணம் எனது விளையாட்டுத் திறனை பாதிக்காது. ஆனால் களத்திற்கு வெளியே இது எனது மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரை நாம் விளையாட்டுத் துறை அமைச்சராக பெற்றுள்ளோம். அவர் இதனை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் ஆசிய கோப்பை வெற்றி, நான் பணியை பெற உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இவ்வாறு சவிதா கூறினார்.
பதில் இல்லை
ரியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்ததும் சவிதா பூனியா, சாய் அகாடமியில் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான சவிதா, ஆசிய கோப்பை தொடரின் போது தனது 150-வது ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. –