இந்திய கிரிக்கெட் வீரர்கள் 30 வயதை கடந்துவிட்டாலே விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது என்றும், தோனியை கை காட்டுபவர்கள் ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது குறித்து பேசுவதில்லை என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தோனி விளையாடிய விதம் கடும் விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. முன்னாள் வீரர்களான விவிஎஸ் லட்சுமண், அஜித் அகர்கர் ஆகியோர் டி20 ஆட்டத்தில் இளம் வீரருக்கு தோனி வழிவிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூயிருப்பதாவது:
லட்சுமண், அகர்கர் ஆகியோர் தங்களது கருத்துகளை மட்டுமே தெரிவித்துள்ளனர். இது அவர்களது பார்வையாகும். தேர்வாளர்களின் பார்வையாகவோ, கேப்டனின் பார்வையாக இது இல்லை. என்ன நடைபெறுகிறது என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, ஒவ்வொரு முறையும் அந்த வீரர் மீது தவறுகளை கண்டு பிடிக்கிறார்கள். மேலும் ஓய்வு பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தோனி விளையாடிய அதே ஆட்டத்தில் மற்ற வீரர்கள் வெற்றிகரமாக செயல்படாததை நாம் பார்ப்பதில்லை. ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிலும் கூக்ளி பந்தை எதிர்கொள்ள முடியாமல் போல்டானார். இதை நாம் கண்டுகொள்வதில்லை. தொடக்க வீரர்கள் வழக்கமான தொடக்கத்தை கொடுக்கவில்லை என்ற உண்மையையும் நாம் பேசுவதில்லை. ஆனால் தோனியை மட்டும் கை காட்டுகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.