ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 14வது லீக் போட்டி, மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் கோல்டன் டக் அவுட் ஆகினர்.
இதனால் முதல் ரன்னை எடுக்கும் முன்பே, 2 விக்கெட்டை மும்பை இழந்தது. எனினும் அதன்பின் கேப்டன் ரோகித் சர்மா 94 (52 பந்துகள், 10 பவுண்டரி, 5 சிக்சர்), எவின் லீவிஸ் 65 (42 பந்துகள், 6 பவுண்டரி, 5 சிக்சர்) ரன்களை விளாசியதால், மும்பை இமாலய ஸ்கோரை குவித்தது.
பெங்களூர் தரப்பில், உமேஷ் யாதவ், கோரி ஆண்டர்சன் தலா 2, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட்டிங் செய்த பெங்களூர், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து, 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தனி ஒருவனாக போராடிய கேப்டன் கோஹ்லி, கடைசி வரை ஆட்டமிழக்காமல், 92 ரன்களை (62 பந்துகள், 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி காக் 19, டி வில்லியர்ஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். கோரி ஆண்டர்சன் டக் அவுட்டானார்.
மும்பை தரப்பில் குர்ணல் பாண்டியா 3, பும்ரா, மெக்கிளனகன் தலா 2, மார்கண்டே 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், மும்பை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பை கேப்டனும், ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ரோகித் சர்மா, வெற்றி குறித்து கூறுகையில், ‘’எங்களது தொடக்கம் மிக மோசமாக இருந்தது. உமேஷ் யாதவ் சரியான ஏரியாக்களில் பந்து வீசியதாக நினைக்கிறேன்.
நான் விளையாட சென்றபோதும், ஆடுகளம் மென்மையாகவே இருந்தது. எனவே சற்று நேரம் பொறுமையாக விளையாடி விட்டு, அதன்பின் அதிரடியாக விளையாடலாம் என நினைத்தேன்.
சிறப்பாக விளையாடியபோதும், முதல் 3 போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அத்தகைய சூழ்நிலையில் கிடைத்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது.
பேட்டிங் ஆர்டரில் நான், நான்காவதாக களமிறங்குவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஏனெனில் இதன் மூலம் அணி சமநிலை பெறும்.
அத்துடன் டாப் ஆர்டரில் இளம் வீரர்கள் சுதந்திரமாகவும் விளையாட முடியும். எவின் லீவிஸ் விளையாடுவதை பார்ப்பது என்பதே ஒரு உற்சாகமான விஷயம்தான்.
எவின் லீவிஸ் அதிரடியை தொடங்கி விட்டால், அதன்பின் அவருக்கு பந்து வீசுவது மிக மிக கடினம்’’ என்றார்.