2003-ம் ஆண்டு FIDE (World Chess Federation) உலக செஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டியில் வென்று `உலகின் அதிவேக சதுரங்க வீரர்’ என்ற பட்டத்தை, 34 வயதுடைய வீரர் ஒருவர் பெறுகிறார். இந்திய நாட்டின் தெற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த அந்த வீரருக்கு விருது கிடைத்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சிவந்த செஸ் விளையாட்டில், ரஷ்யர் அல்லாத ஒருவர் இத்தகைய சிறப்பை அடைந்ததன் ஆச்சர்யம் அது. 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்தான் அந்த வீரர். `புத்திக்கூர்மையுடைவர்களின் விளையாட்டு’ எனச் சொல்லப்படும் செஸ் விளையாட்டுப் போட்டியில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்; செஸ் உலகின் எவர்கிரீன் ராஜா!
மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், சிறு வயதிலிருந்தே கூர்மையான நினைவாற்றல்கொண்டவர். இதை உணர்ந்த அவரது தாயார் ஆறு வயதிலிருந்தே அவருக்கு செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தார். சென்னை எழும்பூரில் உள்ள `டான் போஸ்கோ’ பள்ளியில் படித்த விஸ்வநாதன் ஆனந்தை, செஸ் விளையாட்டை முறையாகக் கற்றுக்கொடுக்கும் `டால்’ என்ற செஸ் கிளப்பில் சேர்த்தார். அதன் நீட்சிதான், விஸ்வநாதன் ஆனந்த 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 1984-ம் ஆண்டில் தன் 15-வது வயதில், `INTERNATIONAL MASTER’ பட்டத்தை வென்றார். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்ற இவர், கல்லூரி மாணவராக இருந்தபோதே உலக செஸ் தர வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
1987-ம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், `உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர்’ என்ற பெருமையைப் பெற்றார். பிறகு, 1988-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் `கிராண்ட் மாஸ்டர்’ ஆனார். தொடர் சாதனைகளுக்காக 18 வயதிலேயே பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.
1991-ம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன்முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் `அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், கால் இறுதிச்சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதைத் தொடர்ந்து, 1995-ம் ஆண்டில் அரை இறுதியிலும், 1996-ம் ஆண்டு பி.சி.ஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்வி கண்ட ஆனந்த், 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் `அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
பிறகு, 2007-ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவுசெய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். 2010-ம் ஆண்டில் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப்பில்ல, வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, நான்காவது முறையாக வேர்ல்ட் சாம்பியன் ஆனார். 2012-ம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில், இஸ்ரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், பத்ம ஶ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என இந்திய அரசின் அங்கீகாரத்தை இளம் வயதிலேயே பெற்றவர். செஸ் விளையாட்டில் பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் கடந்து, உலகெங்கும் செஸ் விளையாடும் பலருக்கும் ரோல்மாடலாக மிளிரும் தமிழன் விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று பிறந்த நாள்.
வாழ்த்துகள் மாஸ்டர்!

