சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ரன் இயந்திரமாகியிருக்கும் கேப்டன் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
போபாலில் நேற்று மைண்ட் ராக்ஸ் 2017 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அசாருதீன் கூறியதாவது:
விராட் ஒரு ஸ்பெஷல் பிளேயர், ஆனால் ஒரு வீரருடன் மற்றொருவரை ஒப்பிடுவது கடினம். சச்சின் ஆடும்போது பவுலிங், சூழ்நிலைகள் வேறு, அதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டு மீண்டார், கோலி இப்படி தன் கவனத்தைக் குவித்தார் என்றால், உடல்தகுதியில் சிறப்பாக இருந்தாரென்றால் எந்த சாதனையையும் முறியடிக்க முடியும். ஆனாலும் இன்னும் கோலி நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.
இருவரையும் ஒப்பிட முடியாது. கோலி, சச்சின் இருவருமே ஸ்பெஷல் பிளேயர்களே. சச்சின் பல சாதனைகளைப் புரிந்துள்ளார், கோலி அதனை ஒருநாள் உடைக்கலாம். முடியாது என்று எதுவும் இல்லை. ஆனால் சீராக ஆட வேண்டும். கோலி இளம் வீரர் இப்போது, ஆனால் வயது ஏற ஏற ரிஃப்ளெக்ஸ் குறையும், ஆனால் கோலியிடம் வேறு ஒரு தள உடல்தகுதி நிலவுகிறது.
இவ்வாறு கூறினார் அசாருதீன்.
அசாருதீன் கூறுவதை ஒருவாறு விளக்கமளித்து புரிந்து கொண்டால், சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிருக்கு எதிராக அறிமுகம் ஆகி அதன் பிறகு இந்திய மண்ணைத் தொடுவதற்கு முன்பாக நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று கடுமையான பயணங்களில் சாதித்து பெரிய அளவில் பெயரெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.