தற்கால கிரிக்கெட்டில் மிகப்பெரிய கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் பெரிய பிம்பமாகவும் ஆளுமையாகவும் உருவாகி வருகிறார் விராட் கோலி, ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கம் இதனைப் பொருட்படுத்தவில்லை என்று சங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்குச் செல்பவர்கள் அங்கு உள்ள புகைப்பட கேலரியில் விராட் கோலியின் ஒரு புகைப்படம் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சியே அடைவர், சுவற்றில் தொங்கும் புகைப்படங்கள் எல்லாம் டெல்லி கிரேட் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள், அதுவும் ஒரு அழகியல் உணர்வற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதையே காண முடியும்.
இது குறித்து முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் வேதனையான நகைச்சுவையுடன் குறிப்பிட்ட போது, “டெல்லி கிரிக்கெட் சங்கம் இருக்கும் நிலவரத்தைப் பார்க்லும் போது இது ஒன்றும் வழக்கத்துக்கு மாறானதல்லவே” என்றார்.
எப்போதுமே டெல்லி கிரிக்கெட் சங்கம் அதன் வீரர்களை மரியாதையாக நடத்தியதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கான வசதிகள் போதாமை ஒரு டெஸ்ட் மையமாக தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளது என்றார் இன்னொரு மூத்த வீரர்.
வருகை தரும் அணிகள் எதுவாக இருந்தாலும் ஓய்வறையில் போதிய வசதிகள் இல்லை என்ற புகார்களை எழுப்பியவண்ணம்தான் இருந்தன. ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் டிடிசிஏ நிர்வாகியாக இருந்த காலத்தில் தன் சொந்த முயற்சிகளினால் வீரர்களுக்கு சிலபல வசதிகளைச் செய்து கொடுத்தார், ஆனால் அப்படியும் எதிலும் முன்னேற்றம் இல்லை.
கோட்லாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை இல்லை என்று மொஹீந்தர் அமர்நாத் அந்தப்பக்கம் வருவதையே தான் நிறுத்தி பல ஆண்டுகள் ஆனதாகத் தெரிவித்துள்ளார்.
“கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு கவுரவம் வழங்க வேண்டும். அதுவும் தனித்துவமான வீரர்களுக்கு கவுரவம் வழங்க வேண்டும். எந்த வீரரும் இதற்காகக் கெஞ்சப்போவதில்லை, இது கிரிக்கெட் சங்கத்தின் கடமையாகும். வெளிநாடுகளில் வீரர்களுக்கு வழங்கப்படும் கவுரவத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்கிறார் மொஹீந்தர் அமர்நாத்.
உலகம் முழுதும் ஓய்வறை, காலரிகள், நுழைவாயில்கள் ஆகியவற்றை முன்னால் லெஜண்ட் வீரர்கள் பெயரில் அமைப்பது வழக்கம்தான். அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது கர்நாடக அரசு சின்னஸ்வாமி ஸ்டேடியத்துக்கு அருகில் உள்ள டிராபிக் சர்க்கிளுக்கு கும்ப்ளே பெயரிடப்பட்டது.
சேவாக் முச்சதம் அடித்த போது ஸ்டேடிய நுழைவாயில் ஒன்றை சேவாக் பெயரில் வைக்க முடிவெடுக்கப்பட்டது, 200 தங்கக்காசுகளும் அவருக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் இவையெல்லாம் காகிதத்தில்தான் உள்ளது.
இந்நிலையில் டிடிசிஏ நிர்வாகி, ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரமஜித் சிங், ஹால் ஆஃப் ஃபேம் ஒன்றை அமைக்க கிரிக்கெட் சமூகம் எதிர்நோக்குகிறது.