பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காவாஜா அசீப்புக்கு, 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அமெரிக்கா தரும் நெருக்கடி
சர்வதேச அளவில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முன்னணி அமைப்பு தான் ஜமாத் உத் தவா. இதன் தலைவர் ஹபீஸ் சையது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதும் இவர் தான். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பாக குற்றம் சாட்டினார். அமெரிக்காவிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி கொண்டு, பயங்கரவாத அமைப்புகளுக்கு அந்த நாடு ஆதரவு அளித்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஜமாத் உத் தவா அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. ஹபீஸ் சையது மற்றும் அவரது உதவியாளர்கள் நான்கு பேரை, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், வீட்டு காவலில் அடைத்து ஜன., 30ம் தேதி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
இச்சூழ்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்., வெளியுறவு அமைச்சர் காவாஜா அசீப் பேசுகையில், ‘ஹபீஸ் சையதும், ஹக்கானிஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு சுமையாக உள்ளன. ஆனால், அவர்களிடம் இருந்து விடுபட, பாகிஸ்தானிடம் போதிய ‘சொத்து’ இல்லை. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என அமெரிக்கா கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன், அவர்களை, ‘டார்லிங்’காக, அமெரிக்கா கருதி வந்தது’ என்றார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சையது, அமைச்சர் காவாஜா அசீப்புக்கு, 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.