இளம் இசையமைப்பாளர்களில் தனி முத்திரை பதித்தவர் யுவன்ஷங்கர் ராஜா. அவருடைய பல பாடல்கள் இளையராஜா பாடல்களைப் போல என்றும் இனிமை என சொல்லும் விதத்தில் அமைந்த பாடல்கள். சுசீந்திரன் இயக்கிய “நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்” ஆகிய இரண்டு படங்களிலும் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சிறந்த பாடல்களும், பின்னணி இசையும் அமைந்தன. அதன் பின் சுசீந்திரன் இயக்கத்தில் யுவன் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு சுசீந்திரன் ஆரம்பித்த ‘சாம்பியன்’ படத்திற்கு அரோல் கொரேலி இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்தப் படத்திற்காக சுசீந்திரன் முதலில் யுவனைத்தான் அணுகியிருக்கிறார். என்ன காரணமோ, அந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை.
இது குறித்து டுவிட்டரில் சுசீந்திரன் கூறியிருப்பதாவது, “யுவன்ஷங்கர் உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை. யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனைச் சுற்றியுள்ள நண்பர்கள்தான் (புதிய நண்பர்கள்). இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தில் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
யுவனின் புதிய நண்பர்கள் அப்படி என்ன செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. யுவனின் கவனத்திற்கு இது போகுமா என்று கூடத் தெரியவில்லை.