‘பாகுபலி’ படம் இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஒரு படமாக சினிமா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. அந்தப் படத்திற்காக சில பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டன. அவற்றில்தான் மகிழ்மதி அரண்மனை மற்றும் குந்தலதேசம் அரண்மனை ஆகியவை உருவாக்கப்பட்டன. பல கோடி ரூபாய் செலவில் உருவான அந்த அரங்குகள் படம் பார்க்கும் போது வியக்க வைத்தன.
கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அந்த அரங்குகள் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் போர்க் கருவிகள் உருவாக்கம், தேர்கள் உருவாக்கம் என சரித்திரக் காலப் பொருட்கள் பலவற்றையும் உருவாக்கினார்கள். அவையனைத்தும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கலைக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது.
‘பாகுபலி 2’ படமும் தற்போது ஓடி முடித்துவிட்டதால், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் போடப்பட்ட அந்த அரங்குகள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. சினிமாவை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு மக்கள் தற்போது அவற்றை அதிக ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
ஐதராபாத்தின் அடையாளமாக கோல் கொண்டா கோட்டை, சார்மினார், உசைன் சாகர் லேக் ஆகியவற்றுடன் இனி மகிழ்மதி அரண்மனையும் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
