துலீப் டிராபியில் தன் அறிமுகப் போட்டியில் இரட்டைச் சதம், பிங்க் பந்து கிரிக்கெட்டில் முதல் இரட்டைச்சதம் அடித்த இந்தியர் மேலும் அணி 205/9 என்ற சரிவில் இருந்த போது தன் தனிமனித சாகச இரட்டைச் சதம் மூலம் இந்தியா ரெட் அணியை 383 ரன்களுக்கு உயர்த்தியது என்று தமிழக வீரர் பாபா இந்திரஜித் சில சாதனைகளைப் புரிந்துள்ளார்.
கான்பூரில் நடைபெறும் இந்தியா ப்ளு அணிக்கு எதிரான பகலிரவு துலீப் கோப்பை போட்டியில் இந்திய ரெட் அணியின் 9-வது விக்கெட் விழும்போது இந்திரஜித் 60 ரன்களில் இருந்தார். இந்த நிலையிலிருந்து சதமெடுப்பதே கஷ்டம், அதிலும் இரட்டைச் சதம் என்றால் இந்திரஜித்தின் திறமை அளப்பரியதாகவே கருத வேண்டும். அதிகபட்ச கடைசி விக்கெட் கூட்டணியாக 178 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இவருக்கு உறுதுணையாக விஜய் கோஹில் என்பவர் ஆடினார். இவர் 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இந்திரஜித் 280 பந்துகளில் 20 பவுண்டரிகள் 6 சிக்சருடன் 200 ரன்கள் எடுத்து கடைசியாக இந்தியா புளூ பவுலர் திவாரியிடம் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டத்தில் 120 நாட் அவுட் என்று இருந்த பாபா இந்திரஜித் 2-ம் நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை புரிந்தார். எதிரணியான இந்தியா ப்ளூ கேப்டன் சுரேஷ் ரெய்னா இவர் சதம் கடந்தவுடனேயே எல்லைக் கோட்டருகே 5 பீல்டர்களை நிறுத்தியும் இந்திரஜித்தின் அதிரடியை ஒன்றும் செய்ய முடியவில்லை.
”கடைசி விக்கெட் என்பதால் வரும் ஓவர்களின் முதல் 3 பந்துகளை நான் ஆடுவதாகவும் அதன் பிறகு விஜய்யிடம் ஸ்ட்ரைக் கொடுக்கவும் திட்டமிட்டேன். அவர் ஷாட் ஆடும்போது இரண்டு ரன்களை மிக வேகமாக ஓடி எடுத்தோம். அவரும் நல்ல உத்தியில் தடுப்பாட்டம் ஆடினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை ஆடாமல் விட்டார்.
மேலும் சிகப்புப் பந்தில் தையல் நன்றாகத் தெரியும் பிங்க் பந்தில் இரவில் சரியாக தையல் தெரியவில்லை. முதல் சில ஓவர்களை நிதானமாக ஆடிவிட்டால் அதன் பிறகு இந்தப் பந்தும் எளிதுதான். ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம், விளக்கொளியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களை புரிந்து கொள்வது கடினம், நல்ல வேளையாக இந்தியா ப்ளூ அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் இல்லை” என்றார் இந்திரஜித்
இந்தியா ரெட் அணியின் 383 ரன்களுக்கு எதிராக இந்தியா ப்ளூ அணி 232 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழ்ந்துள்ளது.