ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பிக் பாஸ் பற்றியே பதிவிட்டு வருவதைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஸ்ரீப்ரியா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருபவர் ஸ்ரீப்ரியா. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கமலுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியே பதிவிட்டு வருவதைப் பற்றி ஸ்ரீப்ரியாவிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிறுகடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘பிக் பாஸ்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’, ‘நிஜங்கள்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து நீங்கள் ஏன் கருத்து கூறுகிறீர்கள் என்று சிலர் கேட்கின்றனர். நான் சுதந்திர நாட்டில் வாழ்கிறேன், எனக்குச் சொந்தமாக டிவி உள்ளது, என்னுடைய கேபிள் இணைப்புக்கு நான் பணம் செலுத்துகிறேன், அனைத்திற்கும் மேலாக என் கருத்துகள் எதுவும் மரியாதை குறைவானதல்ல.
ஊடகம் என்பது என் சப்ஜெக்ட், அது குறித்துப் பேசுவது எனக்கு சவுகரியமாகவும் உள்ளது, அதைப்பற்றிய அறிவும் எனக்கு உள்ளது. என் கருத்துகளைப் படிப்பதில் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் இணைப்பைத் துண்டிக்கலாமே!
எனக்கு வேறு வேலையே இல்லையா என்று கேட்கும் சிலருக்கு நான் கூறும் பதில் இதுவே: செல்லங்களே, என்னுடைய எழுத்துகளைப் படிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வேலை இல்லாத போது நான் விரும்புவதை நான் சுதந்திரமாகச் சொல்வேன் என்று நான் ஏன் கூறக் கூடாது?
இவ்வாறு ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.