சென்னையில் நடைபெறும் வாரியத் தலைவர் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் வலது கை ஆஃப் ஸ்பின் வீசிய அக்ஷய் கர்னேவர் திடீரென இடது கை ஸ்பின் வீசியதில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் திகைத்தார்.
இடது கை வீரர் டிராவிஸ் ஹெட்டுக்குப் பந்து வீசும் போது ஆஃப் ஸ்பின் வீசிய அக்ஷய் கர்னேவர் சிங்கிள் கொடுத்தார், ஸ்ட்ரைக்குக்கு மார்கஸ் ஸ்டாய்னிஸ், வலது கை வீரர் வந்தார், உடனே நடுவர் இப்போது இடது கை ஸ்பின் வீசுவார் என்று அறிவிக்க ஸ்டாய்னிஸ் அதிசயித்ததோடு, லேசாகத் திகைத்தார்.
ஆஸ்திரேலிய அணி 347 ரன்களைக் குவித்தது வேறு விஷயம், அதில் அக்ஷய் கர்னேவர் 6 ஓவர்களில் 59 ரன்களைக் கொடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதும் வேறு விஷயம்.
ஆனால் கிரிக்கெட்டில் இரண்டு கைகளிலும் பந்து வீசும் ஒரு வீரர் மிகவும் அரிதான நிகழ்வே. விதர்பா கிரிக்கெட் வீரரான அக்ஷய் கர்னேவர் கிரிக்கெட்டுக்குள் புதுமையைப் புகுத்தியுள்ளார். ஆஃப் ஸ்பின்னராகவே இவர் தொடங்கினார், ஆனால் பேட்டிங் மற்றும் த்ரோ இடது கையில் செய்தார், இதனால் அவரது பயிற்சியாளர் இடது கை ஸ்பின்னும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
பேட்ஸ்மென்கள் ஸ்விட்ச் ஹிட் ஆடும் போது முன் கூட்டியே தெரிவிக்க வேண்டியதில்லை, ஆனால் பவுலர் இன்னொரு கையில் மாற்றி வீசும் போது அதை நடுவருக்குத் தெரிவித்து அதை அவர் பேட்ஸ்மெனுக்குத் தெரிவிக்க வேண்டு, கிரிக்கெட்டின் பாரபட்சமான விதிமுறைகளில் இதுவும் ஒன்று.
என்னதான் கிரிக்கெட் பேட்ஸ்மென்கள் ஆதிக்க ஆட்டமாக மாறிய போதிலும் அவ்வப்போது அஜந்தா மெண்டிஸ், தனஞ்ஜய டிசில்வா இப்போது அக்ஷய் கர்னவேர் ஆகியோர் அந்த ஆதிக்கத்தை முறியடிக்க தங்கள் தரப்பில் முயற்சி செய்கின்றனர்.
பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்களைக் குவிக்க தொடர்ந்து ஆடும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் என்று மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்குகிறது.