சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் தோல்விக்குப் பதிலடி கொடுத்ததோடு தொடரைச் சமன் செய்தது.
வங்கதேசத்தை 2-வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு மடித்த ஆஸ்திரேலியா பிறகு வெற்றிக்குத் தேவையான 87 ரன்களை 3 விக்கெட்டுகளை இழந்து எடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது.
தொடர் நாயகர்களாக நேதன் லயன், டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட, ஆட்ட நாயகனாக இந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன் தேர்வு செய்யப்பட்டார். வெற்றிக்கான ரன்களை கிளென் மேக்ஸ்வெல் கவர் திசையில் பவுண்டரி மற்றும் மிட்விக்கெட் சிக்ஸ் மூலமும் எடுத்தார்.
4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 377 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆக, 2-வது இன்னிங்சை வங்கதேச அணி சீரழிவாகத் தொடங்கியது.
மிர்பூர் டெஸ்டில் 9 விக்கெட்டுகளை நேதன் லயன் கைப்பற்றினாலும் ஆஸ்திரேலியா தோற்றது ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் லயன் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்சில் லயன் 33 ஓவர்களில் 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேச வீரர்களின் பேட்டிங் பலவீனத்தை அம்பலமேற்றினார்.
இந்த ஆண்டில் நேதன் லயன் 46 விக்கெட்டுகளுடன் அஸ்வின், ஜடேஜா (44 விக்) ஆகியோரைக் கடந்து சென்றுள்ளார். முரளிதரனிடம் பயிற்சி பெற்ற பிறகே ஆசியப் பிட்ச்களில் எந்த பிளைட்டில், எந்த லெந்தில் வீச வேண்டும் என்பதை லயன் திறம்படக் கற்றுக் கொண்டுள்ளது தெரிந்தது. இவரது பிளைட், வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் லாவகம், பவுன்ஸ் ஆகியவை ஷேன் வார்னுக்குப் பிறகு வீசினால் பார்க்க ஆவலைத்தூண்டும் ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின்னராக லயன் வளர்ச்சியடைந்துள்ளார்.
இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச பேட்ஸ்மென்கள் ஆக்ரோஷம் என்பதை தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு ஷாட் தேர்வில் ஆஸ்திரேலிய பவுலர்களை ஏதோ நெட் பவுலர்கள் என்று நினைத்தது போல் தெரிந்தது. இதனால் 43/5 என்ற நிலையில் தரைமட்டமானது. சவுமியா சர்க்காரை பேட் கமின்ஸ் விரைவில் வெளியேற்ற, நேதன் லயன் பந்தில் தமிம் இக்பால் ஸ்டம்ப்டு ஆனார், இம்ருல் கயேஸ் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுக்க, ஷாகிப் அல் ஹசன் ஸ்லிப்பில் பிடித்துப் போடப்பட்டார், லயன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நசீர் ஹுசைன் 5 ரன்களில் ஓகீஃப் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி வெளியேற 43/5 என்று இன்னிங்ஸ் தோல்வி அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயத்தில் முஷ்பிக்குர் ரஹிம் (31), சபீர் ரஹ்மான் (24) இணைந்து சிறிய அளவில் மீட்டனர், சபீர் ரஹ்மான் கடும் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டார், அடுத்தடுத்த பந்துகளில் ரிவியூ சென்றது.
ஆனால் இதைப் பயன்படுத்தத் தவறிய சபீர் ரஹ்மான், உணவு இடைவேளைக்குப் பிறகு லயன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அபாரமாக வீசிய பேட் கமின்ஸ், 31 ரன்களில் முஷ்பிகுர் ரஹீமை வெறும் வேகத்தில் வீழ்த்தினார். விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. மொமினுல் ஹக் 29 ரன்களில் லயனின் விக்கெட்டாக வெளியேறினார். 157 ரன்களுக்கு வங்கதேசம் சுருண்டது, லயன் 6 விக்கெட்டுகளையும் கமின்ஸ், ஓகீஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
86 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் (8) விக்கெட்டை முஸ்தபிசுர் ரஹ்மானிடம் இழந்தது. டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது, பிறகு கேப்டன் ஸ்மித் (16), ரென்ஷா (22) ஆகியோர் தைஜுல் இஸ்லாம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையே அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். 48/3 என்ற நிலையில் கிளென் மேக்ஸ்வெல் 17 பந்துகளில் 25 ரன்களை விளாச, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 14 பந்துகளில் 16 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது.
ஆட்ட நாயகன்: நேதன் லயன், தொடர் நாயகர்கள்: லயன், வார்னர்.