அம்புலி, ஆ படங்களை இயக்கிய இரட்டையர்களான ஹரி, ஹரீஷ் இயக்கும் புதிய படம் சில்க். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்கிறார். எங்கிட்ட மோதாதே, போங்கு, ரிச்சி படங்களுக்கு பிறகு நட்ராஜ் நடிக்கும் படம் இது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் கூறியதாவது:
இது ஒரு த்ரில்லர் கதை. நடிகை சில்க்கிற்கும் இந்தப் படத்திற்கும் தொடர்பு இல்லை. இது சில்க் புடவையை மையமாக கொண்ட கதை. பட்டுப்புடவைகளுக்கு பெயர்போன காஞ்சிபுரம்தான் தையின் களம். ஆன்லைன் பொருட்கள் விற்கும் ஹீரோ, ஒரு சில்க் புடவையையும் ஆன்லைனின் விற்கிறார். அதனால் அவருக்கு ஏற்படும் ஒரு பெரிய சிக்கலை த்ரில்லர் பாணியில் சொல்கிறோம். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றனர்.