மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிலடி தந்துள்ளார். தான் உட்பட மற்ற பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாமல் போனால் கூட எல்லாரும் வசதியாக ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 2வது டி20 போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு காரணம் எனப் பலர் விமர்சித்திருந்தனர்.
மேலும், முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மன், ‘டி20 போட்டிக்கு இன்னும் இளையவர்களை வைத்து விளையாடவேண்டும்’ என்றும், வீரேந்திர சேவாக், ‘தோனிக்கு அணியில் என்ன பங்கு என்பதை நிர்வாகம் அவருக்கு புரியவைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் 3வது டி20 வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பேசியதாவது:
“ஏன் மக்கள் அவரை மட்டும் தனியாக குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக நான் 3 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லையென்றால் கூட யாரும் என்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நான் இன்னும் 35 வயதைத் தாண்டவில்லை இல்லையா.
தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அனைத்து பரிசோதனைகளிலும் தேர்கிறார். களத்தில் அணியின் வியூகத்துக்கு எப்படியெல்லாம் பங்காற்ற முடியுமோ அப்படியெல்லாம் பங்காற்றுகிறார். தனது ஆட்டத்தில் கடினமாக உழைக்கிறார். அணியில் அவரது பங்கு என்ன என்பது அவருக்குப் புரியும். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதை நிரூபிப்பது சாத்தியமில்லை.
இலங்கை சுற்றுப்பயணத்திலும், ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் நன்றாகத்தான் பேட்டிங் செய்தார். இந்தத் தொடரைப் பொறுத்தவரை அவருக்கு ஆடும் வாய்ப்பும் சரியாக அமையவில்லை. அவர் எந்த நிலையில் பேட்டிங் ஆட வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியாவும் அந்தப் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஏன் தோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? வசதியாக ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இதில் நியாயமில்லை.
தோனி ஆட களமிறங்கும்போது தேவைப்படும் சராசரி, ஓவருக்கு 8.5 முதல் 9.5 ரன்கள் வரை இருக்கிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது போல களத்தின் தன்மை இருக்காது. முதல் நிலையில் இறங்கி ஆடும் வீரர்களால் எளிதாக முதல் பந்திலிருந்தே அடித்து ஆட முடியும். ஆனால் பின்னால் ஆட வரும் வீரர்களுக்கு அப்படி இருக்காது. அதுவும் நாங்கள் ஆடிய களங்கள் ஆட்டத்தின் பிற்பாதியில் தான் தேய்ந்து, சிதைய ஆரம்பித்தன.
எல்லாவற்றையும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அணி வீரர்களும், நிர்வாகமும் ஒருவர் எந்த நிலையில் ஆடச் செல்கிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர். களத்தின் தன்மை எப்படி இருக்கிறது, எந்த சூழலில் ஆடச் செல்கிறோம் என்பது எங்களுக்குப் புரியும். இந்த சூழலை வேறொரு கோணத்திலிருந்து பார்த்து பேசுபவர்களின் கருத்துகளைக் கண்டு நாங்க உணர்ச்சி பொங்க முடிவெடுக்க மாட்டோம்.
டெல்லி ஆட்டத்தில் அவர் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆட்டம் முடிந்ததும் அதை 5 முறை போட்டுக் காட்டினார்கள். ஆனால் ஒரு போட்டியில் ஆடவில்லையென்றதுமே அவர் உயிருக்கு விலை பேசுகிறோம்.
மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தோனி மிக புத்திசாலியானவர். அவரது ஆட்டம், உடல் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கு புரியும். அவர் சார்பில் வேறு யாரும் அதுகுறித்து முடிவெடுக்கக் கூடாது என நினைக்கிறேன்” என்று விராட் கோலி கூறியுள்ளார்.