நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி,சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜோனி பேர்ஸ்டோவ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டிம் சௌத்தீ 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக வட்லிங் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
29 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதற்கமைய நியூசிலாந்து அணிக்கு 381 ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, வின்ஸ் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டு நாட்கள் மீதமிருக்க 382 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, போட்டியின் இறுதிநாளான இன்றுவரை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆனால் விக்கெட்டுகள் கைவசம் இருந்த காரணத்தால் இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகான டிம் சௌத்தீயும், தொடரின் ஆட்டநாயகனாக போல்ட்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.